கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில், மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விஸ்வகர்மா ஜகத்குரு நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் திருக்கோவில் மற்றும் நாகசக்தி அம்மன் தியான பீடம் அமைந்துள்ளது.

இங்கு விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பாபுஜி சுவாமிகளை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், சிறுபான்மை பிரிவு வேலூர் இப்ராகிம் நேரில் சந்தித்து, இருவரும் இணைந்து தீவிர அரசியல் ஆலோசனை நடத்தினர். அப்பொழுது, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகிய பிறகு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், இந்த சூழ்நிலைகளில் இனி எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பயணம், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் பணிகள், இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ள புதிய இயக்கத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கு, இளைஞர்களை தேசிய சிந்தனை பக்கமும் கொண்டு செல்வது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேலூர் இப்ராஹிம், “மத நல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி பயணித்து வருகின்றது. இன்று கோவை மலுமிச்சம்பட்டி பாபுஜி சுவாமிகளை சந்தித்து அரசியல் குறித்து பேசினோம். அதில் தவெக அரசு ஆட்சியமைத்த பின்பு, தான் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
உதாரணமாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் அவர்கள், இன்று விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டும் இழப்பீடு என்று தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு ஆளுமையற்ற அரசியலுக்கு உதாரணமாக பார்ப்பதாக தெரிகிறது. ஆளுமை திறன் இல்லாமல் தவெக தற்போது திணறி வருவதால், விரைவில் இந்த ஆட்சி கலையவும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பாபுஜி சுவாமிகள்,அ.தி.மு.க.வில் இருந்து ஊழல் செய்த அமைச்சர்கள் தான் த.வெ.க.விற்கு செல்வதாகவும்,அவர்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக ஆளுங்கட்சியான த.வெ.க.விற்கு செல்வதாக விமர்சித்தார்..
உண்மையான அ.தி.மு.க.விசுவாசிகள் யாரும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்..




