தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கோவையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது குறித்தும், தாங்கள் பாஜகவிலிருந்து விலகியது குறித்தும் பல்வேறு முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் பாஜகவிலிருந்து விலகி, ‘வி த லீடர்’ (We The Leader) என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அவரது இந்த முடிவை நாங்கள் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறோம். அண்ணாமலை அவர்களின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் நாங்கள் அனைவரும் அவர் பக்கம் வந்துள்ளோம்.இந்த இயக்கம் வருங்காலத்தில் மிகவும் வலுவான ஒரு கட்சியாக மாறும் என்றார்.”என்னுடைய விலகல் கடிதம் உட்பட, பலர் விலகல் கடிதங்களை இன்று காலையிலேயே பாஜக தலைமையிடம் ஒப்படைத்துவிட்டோம்.என்னைப்போலவே பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவிலிருந்து விலகி தற்போது அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்துள்ளோம்.”

“பிற்பகலில் தொடங்கப்பட்ட இந்த ‘வி த லீடர்’ இயக்கத்தில், தற்போது வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இணைந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சாமானிய பொதுமக்களாவர். பாஜக மட்டுமன்றி, ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.”பாஜகவின் சித்தாந்தம் வேறு, எங்களுடைய புதிய இயக்கத்தின் சித்தாந்தம் வேறு. இந்த இயக்கத்தின் முழு ஐடியாலஜியும் தமிழக அரசியலை மட்டுமே சுற்றி இருக்கும். அண்ணாமலை அவர்கள் சுயமான முடிவுகளை மிக வேகமாக எடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். அவருக்கான தகுந்த இடம் பாஜகவில் இல்லாத காரணத்தினாலேயே அவர் அங்கிருந்து விலகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
“அரசியல் நடத்துவதற்குப் பணம் தேவையில்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம். பண அரசியலை நாம் எப்போதோ கடந்து வந்துவிட்டோம். தொண்டர்களின் நிதி உதவியைக் கொண்டு மட்டுமே இந்த இயக்கத்தை நாங்கள் நடத்துவோம்.எங்களது அரசியலில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது, முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும்.

மேலும், பத்திரிகையாளர்களை எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் எப்போதும் தவிர்க்க மாட்டார் என்றார்.”தமிழக மக்கள் ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளைக் கடந்து வந்துவிட்டார்கள். தற்போது தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) உள்ளது, இப்போது நாங்களும் களமிறங்கியுள்ளோம். வருங்கால தமிழக அரசியலில் விஜய் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவர் மட்டுமே முக்கிய சக்திகளாக இருப்பார்கள். அதில் அண்ணாமலை அவர்கள் நிச்சயம் முன்னோக்கிச் செல்வார்.”டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பும் அண்ணாமலை அவர்களுக்குப் பின்னால் ஒட்டுமொத்த தொண்டர் பலமும் இருக்கும் என்று பாலாஜி உத்தமராமசாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.




