• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கோவை சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்ப மாநாடு..,

BySeenu

Jun 4, 2026

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் தொடர்பான 4வது சர்வதேச மாநாடு (AMCEHA 2026) சிஐடி வளாகத்தில் தொடங்கியது.

ஜூன் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, நார்வே, இலங்கை, தென் கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று, பொருட்கள் அறிவியல், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதாரப் பயன்பாடுகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கின்றனர். இந்த மாநாட்டை இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) இயக்குநர் ஜெனரல் டாக்டர் என். கலைச்செல்வி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார்.

தொடக்க நிகழ்ச்சிக்கு சிஐடி கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் திரு ஆர். சந்தோஷ் மற்றும் நார்வேயின் HVL பல்கலைக்கழக ரெக்டர் பேராசிரியர் குன்னார் யிட்ரி ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடி முதல்வர் டாக்டர் அ. ராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆரின் பல்வேறு தேசிய ஆய்வகங்களின் இயக்குநர்கள், HVL பல்கலைக்கழக பேராசிரியர்கள், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தொடக்க நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ஆராய்ச்சி, புதுமை மற்றும் கல்வி பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் HVL மற்றும் CSIR இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக “Lab-to-Fab: Translating Advanced Materials into Industry” என்ற தலைப்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் தொழில் துறை தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் புதுமை அமைப்புகள் பங்கேற்று அறிவியல் கண்டுபிடிப்புகளை தொழில்துறை மற்றும் சமூகப் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கின்றனர்.