தற்போதுள்ள தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளம் அமைச்சர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்க சட்ட மன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முகம்மது பர்வேஸ். புதுக்கோட்டையில் கடந்த தலைமுறைவரை அரசியல்வாதிகள் அனைவராலும் அறியப் பட்டவராக இருந்த, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது தமிழக அளவில் அறியப் பட்டிருந்த ஜாபரலியின் இளைய மைந்தன்தான் இந்த முகம்மது பர்வேஸ். திரைப்பட நடிகராக இருந்த விஜய் அவர்கள் ரசிகர் மன்றம் தொடங்கிய காலம் தொட்டு புதுக்கோட்டை மாவட்ட ரசிகர் மன்றத் தலைவராக இருந்ததோடு பல நற்பணிகளையும் மன்றத்தின் பெயரிலேயே செய்து வளர்ந்து வந்தவர்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதில் இருந்து மாவட்டப் பொறுப்பாளர் மட்டுமல்லாது மண்டலப் பொறுப்பாளராகவும் இருந்து கட்சியை வளர்த்து வந்ததால் முகம்மது பர்வேசுக்கென்று கட்சியின் தலைமையில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வந்திருந்தார். அதனால்தான் இப்போது அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவருக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இஸ்லாமியப் பெருமக்களுக்குள்ள பிரதிநிதித்துவம் தரும் வகையிலும் இவருக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைகளின் அமைச்சராக இவருக்கென்று வழங்கப் பட்டு இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை அருகிலுள்ள திருக்கட்டளையில் இருக்கும் ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் அவர்கள் அமைச்சர் முகம்மது பர்வேஸ் அவர்களைப் பெருமைப் படுத்தும் விதமாக மிகவும் விரும்பி அவருக்கென்று பிரத்தியேகமாக வெள்ளியில் ஒரு விசிலைத் தயாரித்து அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார். இது இப்போது தமிழக அளவில் பேசு பொருளாகி இருக்கிறது.
அதற்குக் காரணம் மரியாதை நிமித்தமாக ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போது அவர்களுக்கு அவரைப் பாராட்டும் விதமாக ஏதாவதொரு பரிசு தரவேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த பட்சம் ஒரு எலுமிச்சம்பழம் தொடங்கி, பழக்கூடைகள், பூங்கொத்துகள், பூக்கூடைகள், பட்டு வேட்டிகள், வண்ண உடைகள், பயனாடைகள், சால்வைகள், சரிகைச் சால்வைகள், புத்தகங்கள்வரை பரிசாக வழங்குவதை வழக்கமாகவோ இயல்பான நடைமுறையாகவோ கடைப்பிடித்து வருகிறார்கள்.
அந்த வகையில்தான் அமைச்சர் மாண்புமிகு ஜா.முகம்மது பர்வேஸ் அவர்களைச் சந்திக்க நினைத்த பணி நிறைவு பெற்ற கல்வி அதிகாரி கு.திராவிடச்செல்வம் அவர்கள் 105-கிராம் எடையுள்ள சுமார் 45ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளியில் தயாரிக்கப் பட்ட விசில் ஒன்றை அன்பளிப்பாக அளித்து தமிழ்நாடு அளவில் பேசு பொருளாக மாற்றியிருக்கிறார்.
கடந்த காலங்களில் வெள்ளிவாள், வீரவாள், வெற்றியைக் குறிக்கும் வேல் போன்றவற்றை வெள்ளியிலும் தங்கத்திலும் பரிசாக வழங்கிய வரலாறுகள் உண்டு. குறிப்பாக திராவிட இயக்க வரலாற்றில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வீரவாள் வழங்கிய அந்தப் புகைப்படம்தான் இன்றளவும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது.
அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்குக்கூட இதுவரை இப்படியொரு அன்புப் பரிசை யாரும் அளித்திருக்க மாட்டார்கள். அந்த அன்புப்பரிசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கென்று கிடைத்திருக்கும் அமைச்சர் மாண்புமிகு ஜா.முகம்மது பர்வேஸ் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

அவரைப் பார்க்க எத்தனையோ அரசியல்வாதிகளும் அரசுத்துறை அலுவலர்களும் சமூக ஆர்வலர்களும் சந்திக்க வரும்போது பரிசுகளும் வாழ்த்துகளும் தந்து கொண்டிருந்தாலும் பணி நிறைவு பெற்ற கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் அவர்கள் இந்த வெள்ளி விசில் வழங்கியதை அறிந்த பலரும் அமைச்சர் அவர்களையும் கல்வி அலுவலர் அவர்களையும் உள்ளன்போடு பாராட்டி வருகிறார்கள். பணிநிறைவு பெற்ற கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் அவர்களது மக்களும் மருமக்களும் மருத்துவத்துறையில் வல்லுநர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.





