தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்த அவர், சுகாதார பராமரிப்பில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொண்டு, தாமதமின்றி சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதை ஏற்றுக்கொண்டு, அனைத்து துறைகளிலும் தேவையான பணியாளர்களை நியமிக்க அரசிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தார். மருத்துவ வசதிகளை மேம்படுத்தி, 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வலுப்படுத்தி, சென்னை செல்லாமல் தாம்பரத்திலேயே முழுமையான சிகிச்சை கிடைக்கும் வகையில் மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனுடன், தாம்பரம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களையும் ஆய்வு செய்த அவர், பல இடங்களில் சுகாதார குறைபாடுகள் மற்றும் பராமரிப்பு பிரச்சினைகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். அவற்றை சீரமைத்து, பொதுமக்களுக்கு சுத்தமான மற்றும் சிறந்த சேவையை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சேலையூர் காமராஜபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டு, விரைவில் சிறப்பாக செயல்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இதனால், தாம்பரம் பகுதியில் சுகாதார சேவைகள் மற்றும் பொதுச்சேவைகள் மேம்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.




