காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மது மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடனும் விக்னேஸ்வர பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்ன வாகனத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முக்கியநாளான இன்று மதுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்நது, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் அன்ன வாகனத்தில் வலம் வந்து தீக்குழிக்கு அருகில் எழுந்தருளியதையடுத்து, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூமிதித்தல் எனப்படும் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவார கால விரதமிருந்து தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தீமிதி திருவிழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான எம். வி.ஓமலிங்கம் கலந்து கொண்டார். முடிவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏராளமானோர் கண்டுகளித்தனர்.




