கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் சனாதனத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி வருவதாகவும், ஏற்கனவே ஜாமீனில் இருக்கும் அவர் இத்தகைய கருத்துகளால் இந்துக்களின் வாக்குகளை இழந்து வருவதாகவும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சைக் கண்டித்து வரும் 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்ட காடேஸ்வரா சுப்பிரமணியம், மத பாகுபாடு இல்லாமல் அரசு செயல்படும் என்ற அவரது உறுதிமொழியை வரவேற்றபதாகவும் டாஸ்மாக் கடைகளைக் குறைக்க விஜய் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். முந்தைய அரசு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், கடவுள் நம்பிக்கை கொண்டவரான விஜய், அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் பாகுபாடின்றி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சபாநாயகர் தனது உரையில் பைபிள் வாசகங்களை மட்டும் கூறாமல், பகவத் கீதை மற்றும் குர்ஆன் வாசகங்களையும் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய, அதுவே சரியான அணுகுமுறை தான் என்றார். விஜய்யின் ஆட்சி குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ஆறு மாத காலத்திற்குப் பிறகுதான் ஆட்சியின் முழுமையான செயல்பாடுகள் தெரியவரும் என்றார். தனது ஜோதிடரை அரசு பதவியில் நியமித்த முடிவை விஜய் திரும்பப் பெற்றிருக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை நம்பினால் ஓராண்டு கூட ஆட்சி நிலைக்காது என்றார்.

மேலும், மக்கள் மாற்றத்தை விரும்பி விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள் அவரது கட்சியினர் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். விஜய் மத்திய அரசுடன் சுமுகமான உறவைப் பேண வேண்டும் என்று வலியுறுத்திய அவர், விஜய் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கையில், அவர் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பாக இருந்தால் திருமாவளவன் ஏன் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இறுதியாக, அண்ணாமலை மீண்டும் பாஜக தலைவராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ வர வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் பாஜக இன்னும் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.



