• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்த வலியுறுத்தல்..,

Byமுகமதி

May 11, 2026

2026-27 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆ. மணிகண்டன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது,
​தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு, தாமதமாக நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு கற்றலில் சிரமங்கள் ஏற்படுகிறது. 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலும், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் கலந்தாய்வு நீடித்ததால் ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்தனர்.

​சிரமங்கள் மற்றும் பாதிப்புகள்:

கல்வியாண்டு தொடங்கிய பின்னர் கலந்தாய்வு நடைபெறுவதால், ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளைப் புதிய இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், கற்பித்தல் பணிகள் பாதியில் தடைபடுவதால் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

​முக்கிய கோரிக்கைகள்:
2026-27 கல்வியாண்டிற்கான அனைத்துக் கட்ட கலந்தாய்வுகளையும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.

பள்ளி திறந்த இரண்டாவது வாரத்திலேயே, மாணவர் சேர்க்கை நடைபெறும் காலத்திலேயே ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பள்ளிகளில் பணியில் சேர வழிவகை செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிட விவரங்களை எமிஸ் தளத்தில் முன்னதாகவே வெளியிட்டு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

​ஆசிரியர்களின் குடும்பச் சூழலையும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இந்த ஆண்டு கலந்தாய்வை முன்னதாகவே நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.