• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பிரதமர் கோவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

BySeenu

Apr 18, 2026

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமார் 5 லட்சம் பேர் அமரும் விதமாக மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களும் பிரதமரின் உரையைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், வாகனங்களை நிறுத்த மைதானத்துக்கு அருகே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு, மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கோவையின் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அவிநாசி சாலை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, காந்தி மாநகர், நேருநகர், சிங்கநல்லூர், சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்களான “ட்ரோன்கள்’ பறக்க விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தடை நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்.17) மாலை 5 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) மாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் அல்லது பிற வான்வெளி ஊர்திகளைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி, விமான நிலையச் சாலை மற்றும் அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலையப் பகுதிக்குள் தனியார் வாகனங்கள் நுழையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பிரதமரின் வருகையையொட்டி கோவை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விமான நிலையம், சிட்ரா, கொடிசியா மைதானம் ஆகிய பகுதிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.