திண்டுக்கல்லில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறுக்கே வந்து மறித்து திண்டுக்கல் சீனிவாசன் எனது வேட்புமனுவை வாங்க வேண்டும் என வற்புறுத்தியதால் பிரச்சனை வெடித்தது.

திண்டுக்கல் சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காலையில் இருந்தே பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில்12.05 மணிக்கு திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு சுயேச்சை வேட்புமனு தாக்கல் செய்து கொண்டு இருந்ததால், வெளியில் நின்று இருந்தார். பகல் 12 .20 மணிக்கு திடீரென வந்த அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், தனக்கு நல்ல நேரம் முடியப்போகிறது என்னை முதலில் விடுங்கள் என்றார்.
போலீசார் அவரை தடுத்தனர். முதலில் வந்தவர் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார், அவரை உள்ளே விட்ட பின்பு தான் நாங்கள் மற்றவர்களை விடுவோம் ,என்றனர். இதனால் போலீசாருக்கும் சீனிவாசனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த நேரத்தில் ஐபி செந்தில் குமார் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது செந்தில்குமாரை பார்த்து சீனிவாசன், தம்பி நீ எப்படி பேசலாமா நல்ல நேரம் முடியப்போகிறது விடுங்கப்பா எங்கள என்றார். இந்த நேரத்தில் ஐபி செந்தில்குமாரை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.

ஐ பி செந்தில்குமார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது குறுக்கு வழியில் உள்ளே வந்த சீனிவாசன் தேர்தல் அதிகாரி பழனிவேல் டேபிளை மறைத்து நின்று, எனது வேட்புமனுவை முதலில் வாங்குங்கள் என்று பிரச்சனை செய்தார். இதற்கு தேர்தல் அதிகாரி பழனிவேல் ஐயா அவர் முதலில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டார். இன்னும் உறுதிமொழி வாசிக்க வேண்டி உள்ளது. அதை வாசிக்க விடுங்கள் என்றார். இல்லை எனக்கு நல்ல நேரம் போய் விடுகிறது. உடனடியாக எனது வேட்பு மனுவை வாங்கி விடுங்கள், அப்புறம் வாசிக்கட்டும், என்றார். இதனால் தேர்தல் அதிகாரி பழனிவேலுக்கும் சீனிவாசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாமக மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி டிஎஸ்பி கார்த்திக் வாக்குவாதம் செய்தார். டிஎஸ்பி கார்த்திக் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சீனிவாசன் டேபிலே மறைத்து நின்று விவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த களோபாரத்துக்கு இடையில் ஐ.பி. செந்தில் குமார் உறுதி மொழியை வாசித்தார்.
கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் திமுக வேட்பாளரை அவரது கூட்டணி கட்சியினரையும் தேர்தல் அதிகாரி பழனிவேல் அமர சொல்லிவிட்டு பின்பு சீனிவாசன் மனுவை வாங்கினார். அப்போது சீனிவாசன் இன்னும் 4 நிமிடம் இருக்கிறது நல்ல நேரம் வர என்று பிடிவாதம் பிடித்ததால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுகவினர் நிருபர்கள் போர்வையில் உள்ளே புகுந்ததால் இருதரப்பினும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது பிரச்சனை செய்யாமல் திமுக வேட்பாளர் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, காங் மாவட்ட தலைவர் மணிகண்டன், விடுதலை சிறுத்தை மாவட்ட தலைவர் மைதீன் பாபா ஆகியோர் திமுக கூட்டணி கட்சியினர் அமைதியாக அமர்ந்தே இருந்தனர்.
இதற்கிடையில் இரு கட்சியினரும் கேட்டிற்கு வெளியே தொடர்ந்து கோசம் இட்டுக் கொண்டிருந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது போலீசார் தடுத்து சமாதானம் செய்ய பெரும் முயற்சி எடுத்தனர்.



