புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அருகே அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இவர்களை பத்திரமாக, பெற்றோரிடம் அனுப்பி விட்டுத்தான் ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்களது வீடுகளுக்குச் செல்வார்கள்.

இந்நிலையில் நேற்று 26.03.2026 வியாழக்கிழமை மாலை பள்ளி விட்டபிறகு நிறைய மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்று விட்ட நிலையில் மூன்று மாணவியரின் பெற்றோர் வராததால் அவர்களை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வதற்காக விஜி என்ற ஆசிரியை நின்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது பள்ளியின் வாசலில் போடப் பட்டிருந்த வேகத்தடையில் அந்த வழியாக வந்த தம்பதியினர் மோதி காயமடைந்தனர். 108ஆம்புலன்சுக்கு போன் செய்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்த விஜி டீச்சர் உடனே அருகில் இருக்கும் பெயிண்ட் கடைக்குச் சென்று பெயிண்டும் பிரசும் வாங்கி வந்து அந்த வேகத்தடையில் கோடு போட்டு அடையாளப் படுத்தி விட்டு அப்புறம் அந்த மாணவியரையும் அனுப்பி விட்டு தனது வீட்டுக்குச் சென்றார்.

விஜி டீச்சர் கோடு போட்டதை அந்த வழியாக வந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஏற்கனவே இதுபோல் பல விபத்துகளை நேரில் சந்தித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா என்ற சமூக ஆர்வலர் உலக மகளிர்தினம் அன்றும் அதற்கு முன்பும் பல வேகத்தடைகளுக்கு வெள்ளைப் பெயிண்ட் அடித்து பல விபத்துகளைத் தடுத்திருக்கிறார். அவர் விஜி டீச்சரின் இந்தச் செயலைப் பார்த்து விட்டு நேரில் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர் சகாயஅமலியின் மூலம் விஜி டீச்சரை வாழ்த்து கூறியதோடு புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார். இருவரையும் தலைமையாசிரியர் பாராட்டி நன்றி தெரிவித்தார்.




