தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதற்கு முன்பாகவே என் டி ஏ கூட்டணி மற்றும் இந்திய கூட்டணி என இரு பிரிவாக தேர்தல் களம் காண்பதற்காக கூட்டணிகள் அமைக்கப்பட்டு விட்டன.

ஆனால் நாங்கள் என்றும் தனித்து தான் நிற்போம் எங்களது கொள்கையில் சமரசமோ உடன்பாடோ கிடையாது என்று அறிவித்துவிட்டு கடந்த பலமுறை தேர்தலை சந்தித்த கட்சி நாம் தமிழர் கட்சியாகும். அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி எங்களது கட்சியில் எந்த கட்சி வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் ஆனால் நாங்கள் எந்த கட்சியிலும் போய் சேர மாட்டோம் என்று அறிவித்து வந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் போகப்போகிறது என்கிற அளவிற்கு பல்வேறு பிரச்சனைகளையும் அந்த கட்சி சந்தித்து விட்டு தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இரு பெரும் கூட்டணிகள் மட்டுமல்ல தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களும் இதுவரை யார் என்று அறியப்படவில்லை. ஆனால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே பெரும்பாலான வேட்பாளர்களை அறிவித்த கட்சி நாம் தமிழர் கட்சியாகும். அதனால் பல மாதங்களாக அக்கட்சியின் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் தேர்தலுக்கான களப்பணியை தொடர்ந்து செய்து வந்தார்கள்.

அந்த வகையில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக பொறியாளர் எழிலரசி தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே கட்சியின் தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் புதுக்கோட்டை நகருக்குள் இன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டார். புதுக்கோட்டை மன்னர் பரம்பரைக்கும் வரலாற்றுக்கும் தொடர்புடைய மாலையீடு என்கிற பகுதியில் இன்று வேட்பாளர் எழிலரசி கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுடன் பரப்புரைக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட நிழல் குடையுடன் கூடிய திறந்தவெளி வாகனத்தில் தனது முதல் பரப்புரையை தொடங்கினார். அவர் பேசுகையில் தமிழ்நாட்டிலேயே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வந்திருப்பது நாம் தமிழர் கட்சி ஒன்றுதான். அதற்காக தங்களிடம் கேட்பது ஒரே ஒரு வாக்குதான். நாங்கள் வெற்றி பெற்று நன்றி சொல்வதற்காக மீண்டும் இதே இடத்திற்கு வருவோம் என்றார்.
அவருடன் மாவட்டச் செயலாளர் பொன்வாசிநாதன், மண்டலப் பொறுப்பாளர் குணசேகரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் துரை.சரவணன் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் கருப்பையா, கனகராஜ், குணசேகர், ராமசுப்ரமணியன், சதீஸ்குமார், ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையீடு பகுதியைத் தொடர்ந்து ராம் தியேட்டர், டிவிஎஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரப்புரை வாகனத்தில் சென்று அனுமதிக்கப்பட்ட நேரம் வரை பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.






