விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை,ஊத்துபட்டி, ராமநாதபுரம்,மேலசத்திரம், ஜக்கம்மாபுரம் அன்னபூரணிபுரம், கஸ்தூரி ரங்காபுரம், பாறைப்பட்டி, கோவில் செல்லையாபுரம், அப்பணம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, விளாமரத்துபட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு மழை நன்கு பெய்து விளைச்சலும் நன்கு இருந்ததால் மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூபாய் 1800 முதல் ரூபாய் 2000 வரை விற்பனையானது. அதனால் இந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல் விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து நிலையில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மூன்று ஆயிரம் ஏக்கர் அதிகளவு மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் சென்ற மாதத்தில் இருந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆரம்ப கட்டத்தில் ரூபாய் 1700 ஆகவும் தற்போது ரூபாய் 1600 ஆக குறைந்துவிட்டது.

இருப்பு வைத்திருந்தால் விலை கூடுதலாக கிடைக்கும் ஆனால் இருப்பு வைக்க போதுமான இடவசதி இல்லாததால் கிடைத்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து நஷ்டம் அடைந்து வருகின்றனர். தாயில்பட்டி அருகே உள்ள வனமூர்த்திலிங்காபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மக்காச்சோளங்களை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் முழுமையாக சேதம் அடைந்து விடும். ஆகையால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு அரசு வழங்க வேண்டும்.

மேலும் மக்காச்சோளம் மூடைகளை இருப்பு வைப்பதற்கு வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







