• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

4 ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் 2ஜி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2017ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.


தீர்ப்பு வழங்கி 4 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழகத்தில் மற்றும் தேசிய அளவில் உள்ள பிரதான கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டு திமுக ஊழல் செய்த கட்சி 2ஜி ஊழலில் கோடி கோடியாக கொள்ளையடித்த கட்சி என்று குற்றச்சாட்டுகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.இது குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விரிவாக காணலாம்.

சிபிஐ இரண்டு வழக்குகளையும், மத்திய அமலாக்கத்துறை ஒரு வழக்கையும், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்தன. முதலாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கின் தீர்ப்பு வெளியானது.

இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்ட 14 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய இந்த தீர்ப்பில் உள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதா என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட ஓ.பி. சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ அமைப்பு தவறிவிட்டது என்று தெரிவித்தார்.


பிரதான வழக்கான 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆன நிலையில், மற்றொரு வழக்கான தனியார் டி.வி.க்கு ரூ.200 கோடி பெறப்பட்டதா என்ற கேள்வி எழவில்லை என்றும் நீதிபதி ஓ.பி.சைனி குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் தொடக்கம் மற்றும் தோற்றம் ஆ. ராசாவின் செயல்பாடுகளில் இல்லை, ஆனால், மற்றவர்களின் செயல்பாடு அல்லது செயலின்மையால்தான் நடந்தது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த உடனடி வழக்கில் குறிப்பிடப்பட்ட சதித்திட்டத்தின் மொத்த உருவமாக ராசா திகழ்ந்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த சதித்திட்டத்தில், தவறில் அல்லது ஊழலில் ராசாவுக்கு எந்த தொடர்பும் இருந்ததாக ஆதாரம் இல்லை என்றும் சைனி குறிப்பிட்டார்.


அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கட்டணத்தை மாற்ற நிதிச்செயலாளர் மற்றும் டிராய் அமைப்பு பரிந்துரை செய்ததாக அரசு தனது குற்றப்பத்திரிகையில் கொடுத்த தகவல் தவறானது என்றும், அரசு ஆவணங்களை தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதி ஓ.பி. சைனி குறிப்பிட்டார்.

மத்திய அரசின் அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கைகளில், தெளிவில்லாததுதான், வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்செயலால் ஈட்டியதான வருமானம் ஏதும் இல்லாதபோது பணத்தை வெளுக்கும் குற்றம் இருக்கமுடியாது. எனவே இந்த வழக்கின் அடிப்படையே இல்லாமல் போனதாகவும், சாட்டப்பட்ட குற்றம் இல்லாமல் போவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேல்முறையீடு தாக்கல் செய்யப்படுவதற்கான நேரம் முடிந்தவுடன், அமலாக்கத் துறையால் இணைக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் தவறானவை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நன்கு ஜோடிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க வழக்கு தொடர்ந்தவர்கள் தவறிவிட்டனர் எனக் கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நீதிபதி ஓ.பி.சைனி வேதனை

கடந்த ஏழு வருடங்களாக, எல்லா வேலை நாள்களிலும், கோடை விடுமுறை நாள்களிலும் தாம் நீதிமன்றத்திலேயே காலை 10 முதல் மாலை 5 வரை யாராவது சட்டரீதியாக ஏற்கத்தக்க ஆதாரங்களோடு வருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்ததாகத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சைனி, புரளியாலும், கிசுகிசுக்களாலும், ஊகத்தாலும் உருவான பொதுக்கருத்தின்வழி யாவரும் சென்றதாகவும் குறிப்பிட்டார். பொதுக் கருத்துக்கு நீதித்துறை நடைமுறையில் இடமில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2ஜி வழக்கு குறித்த தகவல்கள்

முன்னதாக, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோ் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது.


இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்குகளின் விசாரணை ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.