புதுக்கோட்டையில் நள்ளிரவில் சாலையில் உள்ள வேகத்தடையில் தன்னந்தனியாக ஒரு பெண் வந்து வெள்ளை பெயிண்ட் அடித்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

24.02.2026 இரவு 12 மணி கடந்த நிலையில் ஒரு பெண் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கும் பழைய அரசு மருத்துவமனைக்கும் இடையில் உள்ள நான்கு முனைச் சந்திப்பு சாலையில் உள்ள வேகத்தடையைக் கூட்டி சுத்தம் செய்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த வெள்ளை பெயிண்ட் டப்பாவை வாளியில் தண்ணீர் கலந்து பிரஸ் வைத்து கோடு போட்டார். அந்த இடமானது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலை பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலை ஆயுதப்படை மைதானம் செல்லும் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் கல்லூரி செல்லும் சாலை என இந்த நான்கு சாலையும் சந்திக்கும் இடம் ஆகும். இதில் நான்கு புறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்று சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் பூசப்பட்டுள்ள வெள்ளை வண்ணம் தேய்ந்து காய்ந்து போய் இருந்தாலும் ஒரு வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசப்படவே இல்லை. அதனால் அந்த வேகத்தடையைக் கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளானதோடு சிலர் விபத்துகளுக்கும் உள்ளாகி சிக்கியிருக்கிறார்கள். அந்த வேகத்தடைக்கும் இன்னொரு வேகத்தை அடைக்கும் என இரண்டு வேகத்தடைகளுக்கு இந்த பெண் வெள்ளை வண்ண பெயிண்ட் கொண்டு பூசி இருக்கிறார். நள்ளிரவில் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நீங்கள் யார்? என்று கேட்டபோது எனது பெயர் சரோஜா. நான் புதுக்கோட்டையில் தான் வசித்து வருகிறேன். ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறைக்கு உறுதுணையாக இருந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகிறேன். காவல்துறை தரும் ஊதியத்தில் தான் எனது குடும்ப வாழ்க்கை நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இதே இடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் நான் பணிபுரிந்து வந்திருக்கிறேன். அப்போது தஞ்சை செல்லும் சாலையில் உள்ள இந்த வேகத்தடையைக் கடக்க முயன்ற போது இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியதை நான் அருகில் இருந்து நேரில் பார்த்தேன். அதில் வயதான தம்பதியினரும் அடக்கம். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் இதில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசாமல் இருந்ததுதான் எனத் தெரிய வந்தது. அதேபோல் அந்த விபத்தில் இந்த வயதான தம்பதியினர் தப்பித்தது எப்படி என்றால் பின்னால் வந்த கார் சடன் பிரேக் போட்டு நிறுத்தியதால் இந்த தம்பதியினரனது உயிர் வெறும் காயங்களுடன் தப்பியது.
அதன் பிறகு இது குறித்து அரசு நிர்வாகங்களுக்கும் சில அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்தேன். ஆனால் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அதனால் இந்த இடத்தில் விபத்து நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் வெள்ளை வண்ண பெயிண்ட் பூச வேண்டும் என்று நினைத்து ஒரு பெயிண்ட் கடைக்காரரிடம் (அவரது பெயர் குணசேகரன்) விலை கேட்டபோது 500 ரூபாய் வரும் என்று சொன்னார். விவரத்தைச் சொன்னபோது 250 ரூபாய் கொடுத்தால் போதும் பாக்கி எனது பங்களிப்பாக இருக்கட்டும் என்று சொன்னார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அதே கடைக்காரரிடம் நான் நின்ற போது இப்படி ஒரு சேவையை செய்வதற்கு நான் பாராட்டுகிறேன். அதற்கான முழு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் இரண்டு டப்பா பெயிண்டுகளை எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லி ஒரு பிரசையும் கொடுத்தார்.
பகல் நேரத்திலும் பூச முடியாது போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரத்திலும் பூச முடியாது என்பதால் இரவு 12 மணிக்கு மேல் நேரத்தை தேர்வு செய்து வீட்டில் இருந்து விளக்குமாறு, வாளி, தண்ணீர் எல்லாம் கொண்டு வந்து அந்த இடங்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு பெயிண்டை பூசி விட்டேன். இதற்கு எனக்கு சுமார் ஒரு மணி நேரம்தான் ஆனது. அதனால் பல விபத்துக்கள் தடுக்கப்படும்.

இந்த நான்கு முனை சந்திப்பில் முதன்முதலாக பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இடது புறம் ஒரு வேகத்தடை இரவு 10 மணிக்கு மேல் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பணி முடிந்து திரும்பிய பெண் காவல் உதவி ஆய்வாளர் அவர்களை அவரது கணவர் தான் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தார். திடீரென்று அமைத்திருந்த வேகத்தடை தெரியாததால் அதன் மேல் எந்த வண்ணமும் பூசாமல் இருந்ததால் ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டு அந்த காவல் உதவி ஆய்வாளர் இறந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் என்றாலும் இந்த இடத்தில் நடைபெற்ற முதல் விபத்து அதுதான். அதன் பிறகு பேரிகாடு போன்ற சாதனங்களை வைத்து போக்குவரத்து விதிமுறைகளை சற்று அதிகப்படுத்தி எச்சரிக்கை விளக்குகள் எல்லாம் பொருத்தி இருந்தாலும் வெள்ளை வண்ணம் பூசாத வேகத்தடையை இரவில் மட்டுமல்ல பகலிலேயே கண்டுபிடிக்க முடியாது.
அதனால்தான் இந்த வேலையை யார் செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி நம்மால் முடிந்ததை செய்வோம் என்று நான் செய்து வைத்தேன் என்று எளிமையாகக் கூறினார். இரவு நேரத்தில் எங்கும் பெண்கள் பயணிக்க முடியாது, அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றெல்லாம் மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்கள். ஆனாலும் நள்ளிரவு நேரத்தில் யாருடைய துணையும் இல்லாமல் தன்னால் இந்த பணியை செய்ய முடியும் என்று திறம்பட நிரூபித்த ஊர்க்காவல் படைப் பெண் பணியாளர் சரோஜாவை புதுக்கோட்டை மாநகரத்தில் உள்ள பலரும் பாராட்டி வருகிறார்கள்.






