புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நகரம் என்ற கிராமத்தில் இருக்கும் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்றொரு சொலவடை உண்டு. எந்தவொரு மலை உச்சியிலும் முருகன் கோவிலைக் கட்டியிருப்பார்கள். அது மலைதான் என்று இல்லாமல் குன்றாக இருந்தாலும் மேற்சொன்ன சொலவடைக்கேற்ப முருகன் கோவிலைக் கட்டி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
அந்த வகையில் சேந்தன்குடி ஜெயநககரம் என்று சொல்லக் கூடிய இரண்;டு ஊராட்சிக்கும் பாத்தியப் பட்டதாகச் சொல்லப்படும் இந்த முருகன் கோவில் என்பது நகரம் என்ற கிராமத்தில் இருக்கிறது. கிராமத்திற்குப் பெயர் நகரம் என்று வைத்திருந்தாலும் சுற்றியிருக்கும் ஆறு கிராமங்களை உள்ளடக்கிய ஜெமீன் ஆட்சி முறையாக நடந்து வந்திருக்கிறது.

நாடெங்கும் மன்னர்கள் ஆட்சி நடந்து வந்த காலங்களிலும் இங்கு அரண்மனை கட்டி சிற்றரசர்கள் ஜெமீன் என்ற ஆட்சி முறையை ஏற்படுத்தி ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். இங்கு முருகன் கோவிலைக் கட்ட வேண்டும் என்று நினைத்த ஜமீன்தாரர்கள் குன்றின் மீதுதான் குமரனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற முறையில் செயற்கை முறையில் குன்று அளவிற்கு உயரமான திண்டு கட்டி அதன் மீது ராஜகோபுரத்துடன் கூடிய கோவில் கட்டி அங்கு முருகன் சிலையை வைத்து வணங்கி வந்திருக்கிறார்கள்.
அதனால் ஜெமீன் ஆளுகைக்குட்பட்ட ஆறு கிராம மக்களுக்கும் பாத்தியப் பட்டதாக விளங்கி வந்திருக்கிறது. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இக்கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
இது குறித்து இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி, கோவில் பூசகர் சிதம்பரம் குருக்கள் ஆகியோர் கூறுகையில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழாவானது 12நாட்கள் கடந்தும் நடைபெறுவது வழக்கம். அதற்காக புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது அந்தக் காலத்தில் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டப் பகுதிகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து வணங்கி, திருவிழா கொண்டாடி மகிழ்வார்கள்.
அது மட்டுமல்லாது ஒவ்வொரு பவுர்ணமி, பூசம், திருவாதிரை உள்ளிட்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும் விழாக்கள் சிறப்பாக நடைபெறும். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற விழாக்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 20ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் காலை முதல் இரவு வரை முருகனைத் தரிசித்துச் சென்றனர். அருட்கொடை அன்பர்களின் உதவியோடு இந்த ஆண்டு ஏழாயிரம் பேருக்கும் மேல் அன்னதானம் செய்யப் பட்டது.
நன்கொடை தரும் உபயத்தால் அனைத்து விழாக்களுக்கும் அன்னதானம் செய்ய முடிகிறது. அதனை கிராம மக்கள் முன்னின்று நடத்தி வருகிறார்கள். மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட கோவில் என்றாலும் மக்கள் போற்றி வணங்கும் முருகன் கோவிலாக சுற்று வட்டாரப் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் இருப்பது எங்கள் ஊருக்குப் பெருமையாக இருக்கிறது என்றனர்.










