திருநீர்மலை திருமங்கை ஆழ்வார்புரம் அருகே மங்களகிரி மலை பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களால் நிலத்தடி நீர்மட்டமும், கனிம வளங்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகமாகச் சென்று வருவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு நிலைகளில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் பின்னணியில், சமூக விரோதிகள் குழுவாகச் சேர்ந்து நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொதுப்பணித்துறையால் சீல் வைக்கப்பட்ட மங்களகிரி மலைப் பகுதியில், மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் மற்றும் நிலத்தடி நீரை எடுத்துச் சென்று, மணல் சலவை உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், திருமங்கை ஆழ்வார்புரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோத நீர் எடுப்பு மற்றும் கனிம வள சுரண்டலை தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.






