காரைக்கால் மாவட்டத்தில் நண்டலார் முதல் வாஞ்சூர் வரை உள்ள பிரதான சாலை மற்றும் நகர்புற சாலைகளை சீரமைக்காத புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் சாலைக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது அத்துடன் காரைக்கால் மாவட்டத்தின் எல்லை பகுதியான நண்டலார் முதல் வாஞ்சூர் வரை உள்ள பிரதான சாலையும் குண்டும் குழியும் ஆக இருப்பதால் காரைக்கால் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திருநள்ளாறு வேளாங்கண்ணி நாகூர் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரதான சாலைகள் மேம்படுத்தப்படாமலும் சீரமைக்கப்படாமலும் இருப்பதை கண்டித்தும் உடனடியாக புதுச்சேரி அரசு பிரதான சாலைகளை புதுப்பிக்க வலியுறுத்தியும் காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் சாலைக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர் அன்சாரி பாபு தலைமையில் நடைபெற்ற நூதன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் விசிக சார்பில் செந்தமிழ் செல்வன் போராளிகள் குழு தலைவர் கணேஷ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






