கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (வயது 43) என்பவர் பொது கழிவறைக்குச் சென்றபோது, அங்கு தண்ணீர் இல்லை என்பதால் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை தேடினர்.
அப்போது தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, ஜோதி அதற்குள் விழுந்து உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரும் வந்து செல்லும் இடமாக உள்ள பொது இடங்களில் சரி வர பராமரிக்காமல் தண்ணீர் இன்றி உள்ளதாலும், மேலும் தண்ணீர் தொட்டிகளின் பாதுகாப்பு குறித்தும், முறையான மூடிகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணமா ? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.





