உசிலம்பட்டியில் பணி மேம்பாட்டு ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மூட்டா சங்க பேராசிரியர்கள் இரவு முழுவதும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்களுக்கு வழங்குவதை போன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதிய தொகை வழங்கப்படும் என கடந்த 2021 ஆம் ஆண்டு அரசணை எண் 5 மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை கடந்த 5 ஆண்டுகளாக அமல் படுத்தாத சூழலில் அனைத்து பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் ஊதிய நிலுவையை வழங்க கோரி கடந்த ஐந்து ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாததிற்கு முன் ஒரு சில மண்டல பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு மட்டுமே இந்த ஊதிய மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படுவதாகவும், தங்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க கோரி தமிழ்நாட்டின் பல்வேறு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மூட்டா சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் உள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் மூட்டா சங்க செயலாளர் சிவசங்கரி தலைமையிலான பேராசிரியர்கள் இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தொடர் போராட்டமாக இரவு முழுவதும் தொடர்ந்து பெண் பேராசிரியர்கள் முதல் பேராசிரியர்கள் இணைந்து கண்டன கோசங்கள் எழுப்பி கண்டன போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





