சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரதமாதா தெருவில் செயல்பட்டு வரும் 4136 என்ற எண்ணை கொண்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் இன்று சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாரதமாதா தெரு பகுதி முழுவதும் பல கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடமாக இருப்பதால், இங்கு டாஸ்மாக் கடை செயல்படுவது சமூக சீர்கேடுகளை உருவாக்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இறுதியாக அதிமுக மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவரணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.





