மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோனை தலைமை வகித்தார். திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஹரிசங்கர் முன்னிலை வகித்தார். மதுரை யின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முன்னதாக கிராம காவல் தெய்வம் சோனை கருப்பண்ண சாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பகுதியில் உள்ள பெண்கள், குடும்பத்தினருடன் இணைந்து, பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் வைத்தனர்.

பெண்களுக்காக நடத்தப்பட்ட கோலப்போட்டிக்கு மங்கையர்கரசி மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் உமா பாஸ்கர், தமிழ்த்துறை பேராசிரியை அற்புத வள்ளி நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். குணசுந்தரி, ராஜேஸ்வரி, பிரதீபா, மீனாட்சி ஆகியோர் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் சிறப்பு ஊக்க பரிசு வழங்கப்பட்டது.

மாணவர்களின் பரதம், நடனம், சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏ.ஆர்.சிட்டி சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.




