விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார்.

தாயில்பட்டி ஊராட்சியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பொங்கல் வாழ்த்து மடல் அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உரிய பயிற்சி வழங்கப்பட்டு, பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், குடும்ப அட்டைதாரர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், உங்க கனவை சொல்லுங்க படிவங்களை வழங்கினார் .

தொடர்ந்து தகவல்களை பெறும் பணிகளை செய்வதற்கான தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். மேலக்கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை நேரில் பார்வையிட்டு, மாணவர்களின் எழுத்தறிவுத் திறன், கற்றல் திறன் குறித்தும், பாடத்திட்ட முறைகள் குறித்தும் கேட்டறிந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
தூய்மைப் பணிகள மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளையும் நட்டினார்.
கொங்கன்குளம் ஊராட்சியில் சமூகத்தின் மீதான தொழில் நிறுவனங்களின் பங்களிப்புத்தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தினை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மகேஸ்வரி, வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி,ஊராட்சி ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார், உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.




