புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் மெய் நின்றநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலானது இப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராம மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்டு வருகிறது.

நிச்சயதார்த்தம் திருமணம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா என பல்வேறு நிகழ்வுகளும் சுற்றுவட்டார கிராம மக்களால் இங்கு வந்து நிகழ்த்தப்படுகிறது. காலங்காலமாக இது நிகழ்ந்து வந்த போதிலும் கடந்த 2016 ஆம் ஆண்டு கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு நடத்துவதற்கு முன்பாகவே கோவிலின் முன்புறம் உள்ள தீர்த்த குளத்தில் நடுப்பகுதியில் 81 அடி உயரம் உடைய முழு உருவ சிவன் சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டது. புலமை மிக்க தலைமைக் கவிஞரான நக்கீரர் சிலையும் தமிழ்நாட்டில் இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.
இந்த கோவில் குடமுழுக்கு விழா காண்பதற்கு முன்பு சுற்றுவட்டார கிராம மக்களால் மட்டும் வணங்கப்பட்டு வந்த நிலையில் குடமுழுக்குவுக்குப் பிறகு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சிவன் சிலையை காண்பதற்காகவே வந்து வணங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவதையும் காண முடியும். சிவராத்திரி மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் நடத்துவதற்கும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று வரிசையில் நின்று அர்ச்சனைகள் செய்தும் கடவுளை வழிபட்டும் சென்றனர். மேலும் அனைவருக்கும் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நிகழ்வும் மாலை வரை நடந்தது. கோவிலின் வரலாறு குறித்து கோவிலின் பரம்பரை அறங்காவலர் சக்கரவர்த்தி பல தகவல்களையும் தெரிவித்துள்ளார்.




