புதுக்கோட்டையில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, இளைஞர்களின் கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டிய 2026 ஆங்கில புத்தாண்டு…
புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொடுத்து புத்தாண்டு
வாழ்த்து…

2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உலகமெங்கும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டை வரவேற்று மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று மாலை முதல் களைகட்ட தொடங்கியது.

இரவு 10 மணியிலிருந்து தொடங்கிய மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நள்ளிரவு 12 மணி வரை தாண்டி நடைபெற்றது.
புதுக்கோட்டையில் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று நடனமாடி மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடினர்.
புதுக்கோட்டை சத்சங்கத்தின் சார்பில் 36 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோஸ்தவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி நாடு வளரும் பெற வேண்டும் அமைதி நிலவ வேண்டும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை, அண்ணா சிலை அருகில் நகர காவல் துறை கண்காணிப்பாளர் பிருந்தா நகர காவல் ஆய்வாளர் சுகுமாரன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு கேக் ஊட்டி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதே வேளையில் இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக அதிக ஒலியுடன் பொதுமக்களுக்கு இடையூறாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.




