தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாகி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் குற்றம்சாட்டினார்.

மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில், துணை மேயர் காமராஜ் மற்றும் ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையில் சிறப்பாக செயல்பட்ட கவிதா அவர்களுக்கு மாற்றுத் திறனாளி கவுன்சிலராக நியமிக்கப்பட்டதற்காகவும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிய தேசிய விருது பெற்றதற்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலையூர் சங்கர், சேலையூர், சிட்லப்பாக்கம், கடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் பட்டா இருந்தும் வரி வசூல் நடைபெறவில்லை என்றும், மூன்று ஆண்டுகளாக அதிகாரிகளை கேட்டும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், வரி உயர்த்தப்பட்டும் சாலைப்பணிகள் ஒரு வருடத்திற்கு மேலாக தாமதமாகிறது என்றும், சட்டசபையில் அறிவித்த 750 கோடி ரூபாய் யு.ஜி.டி நிதி தாம்பரத்திற்கு வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அதிமுக கவுன்சிலர்கள் உள்ள 10 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் இல்லை என்றும், ஆட்சி முடிவடைய இன்னும் இரண்டு அமாவாசைகள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.




