சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரங்கா நகர் பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் 11 பெயருடைய விவசாய நிலம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோபாலகண்ணன், புருஷோத்தமன், அரவிந்த் உள்ளிட்ட 11 விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக இந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முடிச்சூர் ஊராட்சிக்கு சொந்தமான குளம் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதனை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த பணிகளுக்காக, விவசாய நிலத்தின் ஓரமாக ஐந்து அடி அகலத்தில் தற்காலிகமாக வேலி அமைக்கப்பட்டு, “பணிகள் முடிந்தவுடன் அகற்றப்படும்” என்று அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அந்த ஐந்து அடி நிலம் அரசு நிலம் என்றும், அதை விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி இன்று காலை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், நிலத்தின் நுழைவாயிலை அடைத்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“அரசு பணிகளுக்காக தற்காலிகமாக விட்ட நிலத்தை இப்போது நிரந்தரமாக பறிக்க முயற்சி செய்வது அநியாயம். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு எங்கள் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




