கோவை கவுண்டம்பாளையத்தில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இன்று நடைபெற உள்ள சரஸ்வதி நாகரிகம் குறித்த கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு முற்போக்கு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன.

சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என மாற்றிப் பெயரிட்டு, வரலாற்றை திரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார். இதனை எதிர்த்து, கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கருத்தியல் அணுகுமுறைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன்பட்டவர் அல்ல என்றும், கருத்தரங்கிற்கு எதிராக முதல்வர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.




