மதுரை பைபாஸ் ரோடு, நேரு நகரில் அமைந்துள்ள பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனில் பராமரிப்பு பணி மேற்கொள்ள முயன்ற அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்பகுதியில் முன்னர் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது மூன்று பணியாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்ததை எடுத்துச் சொல்லி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், குடியிருப்பு பகுதிக்குள் உள்ள இப்பம்பிங் ஸ்டேஷனை மாற்றி அமைப்பதாக அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்த நிலையில், எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் பணிகள் தொடங்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், பணிகளை தற்காலிகமாக நிறுத்துவிட்டு, போலீசார் மக்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை பணி தொடரக்கூடாது என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




