கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் இவர் மும்பையை பூர்வீகமாக கொண்டு துபாயில் செயல்பட்டு வரும் ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் துபாயில் உள்ள ஜவுளி நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்ட நிலையில் முருகேசன் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு கடன் பெற்று தருவதற்கு தனக்கு அறிமுகமான மயிலாடுதுறையைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் அணுகியுள்ளார் அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் நல்லமலை என்ற நபரை முருகேசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில் 100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி முன்வைப்புத் தொகையாக 75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என நல்லமலை தெரிவித்த நிலையில் முருகேசன் தனது நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்து அதன் அடிப்படையில் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து மூன்று தவணைகளாக 75 லட்சம் ரூபாய் பணத்தை நல்லமலையின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் துபாய் வங்கியின் காசோலைகள், புரோ நோட் பத்திரம், கடன் ஒப்பந்த பத்திரம், ஆகியவற்றை பெற்றுக் கொண்டு இரண்டு நாட்களில் உங்களது வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் பணம் அனுப்பப்படும் என நல்லமலை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து பணம் வராததால் நல்லமலையிடம் கடன் பணம் குறித்து கேட்டபோது மேலும் ஒரு கோடி ரூபாய் செலுத்தினால்தான் கடன் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் தங்களுக்கு கடன் வேண்டாம் தங்களது பணத்தை கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் நல்லமலை பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகார் தெரிவித்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் முருகேசன் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து முருகேசன் கூறுகையில்,
தங்களின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக கடன் பெற்று தருவதாக கூறி தங்களிடம் 75 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் தங்களது பணத்தை திருப்பி கேட்டால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மேலும் நல்லமலை மீது கடன் பெற்று தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பலர் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது பணத்தை மீட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நல்லமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.








