மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் செல்லும் சாலையில் சாலாச்சிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளம் காரணமாக இந்த பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிகழ்வு தினசரி நடைபெற்று வருவதாக அருகில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். வீட்டின் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை வீட்டின் உரிமையாளர்களே எச்சரிக்கை துணியை கம்புகளில் கட்டி பள்ளத்தில் நட்டு வைத்திருப்பது அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.

இந்த பகுதியானது கருப்பட்டி இரும்பாடி செல்லும் சாலை ஒரு புறமும் நரிமேடு கோட்டைமேடு வழியாக வாடிப்பட்டி செல்லும் சாலை ஒருபுறமும் சோழவந்தானிலிருந்து திண்டுக்கல் செல்லும் முக்கிய சாலை ஒருபுறமும் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








