உலகின் சிறப்பு வாய்ந்த ஹாக்கி அணிகள் உட்பட 24 நாடுகள் பங்கேற்கும் 14வது உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டி மதுரையில் இன்று தொடங்கியது.

கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. ஜெர்மனி ஆஸ்திரேலியா மெக்சிகோ போலந்து மலேசியா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஜெர்மனி ஏழுமுறை உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இரண்டு முறை கோப்பைகளை கைப்பற்றி உள்ளன. இதற்கு முன்பாக கடந்த 2001 ஆம் ஆண்டு சென்னையில் 7ஆவது உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது தான் இந்தியா முதல்முறையாக இந்த கோப்பையை வென்றது. அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

தற்போது மூன்றாவது முறையாக 14 வது உலக இளையோர் ஆடவர் ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ள நிலையில். மூன்றாவது முறையாக இந்த கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரமாக களப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசிய மதுரை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் ஏ ஜி கண்ணன் கூறுகையில், ‘உலக ஆடவர் இளையோர் ஹாக்கி அணிகளின் தரப்பட்டியலில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது ஹாக்கி அணி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக இந்த கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அதுமட்டுமன்றி, சென்னைக்கு அடுத்தபடியாக உலகப் போட்டி ஒன்று மதுரையில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயமாகும். குறிப்பாக ஹாக்கி போட்டிகளில் தென் மாவட்ட இளைஞர்களை ஈர்ப்பதற்கு நல்ல வாய்ப்பு என்றே இதை நாங்கள் கருதுகிறோம். இனி வருங்காலத்தில் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளில் மதுரை முக்கிய இடத்தை பெறும் என்ற அளவிற்கு மைதானம் பன்னாட்டு தரத்திற்கு அமைந்துள்ளது’ என்றார்.
ஜெர்மனி, கன்னடா, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா – Pool A; இந்தியா ஓமன் சிலி சித்தர்லாந்து – Pool B; அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா – Pool C; ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா – Pool D; நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா – Pool E; பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்கதேசம் – Pool F என மொத்தம் ஆறு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டு இன்று தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. Pool A, D, Eயில் உள்ள அணிகளுக்கு மதுரையிலும், Pool B, C, Fயில் உள்ள அணிகளுக்கு சென்னையிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்று காலை 9 மணி அளவில் ஜெர்மனி தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் துவங்கி வைத்து போட்டியை கண்டு களித்தனர்.








