விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி, செவல்பட்டி ,பனையடிப்பட்டி, கண்டியாபுரம் அச்சங்குளம், பந்துவார்பட்டி, அன்பின் நகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் கண்ணக்குடும்பன்பட்டியில் இருந்து ஜெகவீரம்பட்டி செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. மேலும் கண்டியாபுரத்தைச் சேர்ந்த யசோதா, என்பவர் வீடும், கோட்டைப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி என்பவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த மற்றொரு அறையில் தங்கி இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

வீட்டில் இருந்த பாத்திரங்கள் முழுவதும் சேதம் அடைந்தன. வருவாய்த்துறையினர் வீட்டின் இடிந்த பகுதியை பார்வையிட்டனர்.விஜயகரிசல்குளத்தில் உள்ள பாண்டியன் குளம் கணாமாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதே போல் மடத்துப்பட்டி கண்மாய், துலுக்கன்குறிச்சி கண்மாய், அலமேலு மங்கைபுரம் ஊரணி, வல்லம்பட்டி கண்மாய், மீனாட்சிபுரம் கோட்டை கண்மாய் ,ஆகியவை முழுமையாக நிரம்பியது. மேலும் தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண்குண்டம்பட்டி முத்துநகர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாததால் மழைநீர் செல்லாத வகையில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழை நீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு வாரங்களாக மழை பெய்யாமல் மக்காச்சோளபயிர்கள் காய்ந்து வந்த நிலையில் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். வெம்பக்கோட்டை அணையில் நீர் மட்டம் கடந்த வாரம் வரை பதினெட்டு அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 20 அடி உயரமாக நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் அணைக்கு 500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்தால் அணையின் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.








