விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழாண்மறை நாடு, குறுஞ்செவல்,ராமு தேவன்பட்டி, அன்னபூரணியாபுரம், ஜக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, செவல்பட்டி கங்கர சேவல், எட்டக்காபட்டி,மார்க்கநாதபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருபதாயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக தாமதமாக தொடங்கியதால் விவசாய பணிகளும் தாமதமாக தொடங்கி உள்ளன. மானாவாரி பயிரான மக்காச்சோளம் நாற்பத்தி ஐந்துவது நாளில் பயன் தரக்கூடியது. விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மேலும் சென்ற ஆண்டு மக்காச்சோளத்திற்கு இன்சூரன்ஸ் வழங்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மக்காச்சோள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.
தொடர்ந்து மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைவார்கள். இதுகுறித்து கீழாண்மறைநாடு விவசாயி சீனிவாசன் கூறியது
கீழண்மறை நாடு ,செவல்பட்டி, குறிஞ்செவல், ராமுத்தேவன்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தக்காளி, கத்திரிக்காய், சீனி அவரைக்காய், புடலங்காய், வெங்காயம், மிளகாய், உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழக்கன்றுகளும் அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காததால் வேறு வழியின்றி நிலங்கள் தரிசாக மாறுவதை தடுக்க மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறோம்.
தற்போது மக்காச்சோளம் பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் காட்டுப்பன்றிகள் பயிர்களை முழுவதும் சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் காவலுக்கு இருந்தாலும் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க முடியவில்லை. இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் செய்தும் இதுவரை யாரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழை பெய்யாமல் பயிர்கள் கருகும் நிலையில் ஓரளவு காப்பாற்றப்பட்ட பயிர்களை காட்டு பன்றிகளால் சேதம் அடைவதால் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறினார்.






; ?>)
; ?>)
; ?>)
