பேராவூரணியில் மதுக்கடை அருகே ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி – 1 ரேஷன் கடை, அரசு கால்நடை மருத்துவமனை அருகே தனியார் வாடகைக் கட்டடத்தில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம், இந்திரா நகர், செல்வவிநாயகர்புரம் பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வாடகைக் கட்டட உரிமையாளர் ரேஷன் கடையை காலி செய்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில், அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் ரேஷன் கடையை மாற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

புதியதாக ரேஷன் கடையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள இடம், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருப்பதாலும், அப்பகுதியில் இரண்டு மதுக்கடைகள் இருப்பதாலும் பெண்கள் சென்றுவர சிரமமாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்று கூறி, இந்திரா நகர் பாண்டியம்மாள் என்பவர் தலைமையில், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையில், கால்நடை மருத்துவமனை எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ், பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் ரவீந்திரன், பேராவூரணி வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன் உள்ளிட்டோர் அப்பகுதி பெண்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில், தங்களுக்கு அப்பகுதியிலேயே பயன்படுத்தப்படாமல் உள்ள, அரசுக் கட்டிடத்தில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதேபோல், மதுக்கடை அருகே ரேஷன் கடையை இடம் மாற்றும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து உயர் அலுவலர்களிடம் கலந்து பேசி, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.







; ?>)
; ?>)
; ?>)