• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பன்னாட்டு தேயிலை நாள் – டிசம்பர் 15

தாய்சோலை மற்றும் கேரிங்டன் குழும தேயிலை தோட்டங்கள், நீலகிரி. 1989 ம் ஆண்டு ஜனவரி மாதம் உதகையிலிருந்து அப்பர் பவானிக்கு TCB 1298 பேருந்தில் செல்லும்போது முதன்முறையாக பார்த்தபோதே ஒருவித பரவசத்தையும், பிரமிப்பையும் பளிச்சென்று பதியவைத்தது தாய்சோலை. அதுவரை நான் இவ்வளவு நேர்த்தியாக வகிடெடுத்து வாரிய, அழகான தேயிலை தோட்டத்தை பார்த்ததில்லை. ஆங்கிலத்தில் சொன்னால் “magnificently manicured tea garden.” மஞ்சூரிலிருந்து மேற்கே சுமார் 9 கிமீ தொலைவில் உள்ள அமைதியான, அற்புதமான தோட்டம்.

முப்பதாண்டுகளாகியும் மாற்றமில்லாத வனப்பு. லிப்டன், ஹிந்துஸ்தான் லீவர், யுனி லீவர் என்று அவ்வப்போது நிறுவன மாற்றம் மட்டும் உண்டு.


போகும் வழியில் சின்னஞ்சிறு சோலைகளினூடே சிற்றோடைகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்த சாலை இப்போது paver block கற்கள் மற்றும் இருளில் ஒளிரும் செவ்விளக்குகள் பதிக்கப்பட்டு, வளைவுகளில் மோதல் தடுப்புகளோடும், சாலையின் மையத்திலும், ஓரங்களிலும் வரையப்பட்ட வெள்ளைக்கோடுகளோடும் புது பொலிவோடு பளபளக்கிறது. முன்பு பகலிலேயே வழுக்கி விழுந்த இரும்பு குதிரைகள் இன்று இரவிலும் சுகமாய் பயணிக்கின்றன.


வழியிலுள்ள கொண்டைஊசி வளைவு சாலையிலிருந்து பார்த்தால் நேரெதிரில் மலைமுகட்டின் ஓரத்தில், மேகக்கூட்டங்களின் நடுவே கம்பீரமாக வீற்றிருக்கும் தாய்சோலை தேயிலை தொழிற்சாலை. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும், மீண்டும் படமெடுக்க தோன்றும்.


அப்புறம் அந்த அழகான கவிதைபோன்ற பேருந்து நிறுத்தம் – ஒரு பாலம், கீழே வற்றாத சிற்றோடை, பெயர் பலகை, சிமிண்டு பெஞ்சுகள், ஓட்டுக்கட்டிட தபால் நிலையம், மரப்பெஞ்சுகளுடன் தேநீர்கடை, சுற்றி மேய்ந்துகொண்டிருக்கும் கருப்பு வெள்ளை பசுக்கள், புசுபுசு நாய்கள் மற்றும் பூனைகள், கொழுகொழு கோழிகள் – எல்லாம் சேர்ந்து James Herriot கதைசூழலை நினைவுக்கு கொண்டு வரும்.
இப்படிப்பட்ட தாய் சோலை தேயிலை தோட்டத்துக்கு ஒரு வரலாற்று சிறப்பும் உண்டு. இதன் ஒரு பகுதியான கேரிங்டன் தோட்டம் தான் தென்னிந்தியாவின் முதல் தேயிலை தோட்டம்.

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட போர்கைதிகளை கொண்டுதான் சென்ற நூற்றாண்டில் இங்கு தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டது. இன்னும் அந்த பழமையான தேயிலை செடிகள் அங்கு பார்வைக்கு உள்ளன. “ஜெயில் தோட்டம்” என்று ஒரு பேருந்து நிறுத்தமும் உள்ளது.