ஆராமனத்தை பதப்படுத்தும் நெறிமுறையே மதம் என வரையறுக்கப்படுகிறது.
சமீப காலங்களாக மதம் ஆன்மீகம் என்றாலே ஏதோ நகைப்புக்குரிய, நடவடிக்கைக்கு உரிய அம்சங்களைப் போல பொது புத்தியில் விவாதத்துக்குரிய விஷயங்களாக மாறிவிட்டன.
ஆனால் மனித மனத்தை பதப்படுத்துவதே மதம். மனம் -பதம் இந்த இரு வார்த்தைகளின் கலவை தான் மதம்.
இப்படி மனதை பதப்படுத்தும் மதங்களில் மிக முக்கியமானது வைணவம்.
ஆழ்வார்கள் ஆச்சாரியார்களால் வைணவம் நன்கு சமைக்கப்பட்டு மானுட சமுதாயத்தின் மேன்மைக்காக பரப்பப்பட்டது.
அப்படிப்பட்ட வைணவத்தின் மிகப்பெரும் ஞானத்தூதராக இந்த பூமியில் அவதரித்து 120 ஆண்டுகள் வாழ்ந்து தத்துவ ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பல்வேறு ஒழுங்கு அமைப்புகளையும் தகவமைப்புகளையும் உருவாக்கியவர் ராமானுஜர்.

2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் நாம் இருப்பதைப் போல… ஆயிரம் ஆவது ஆண்டின் தொடக்கத்தில் அவதரித்து இந்த பாரத துணைக்கண்டம் முழுவதும் கால்களாலேயே பயணம் செய்து, விசிஷ்டாத்வைதம் என்கிற விழுமியத்தை எட்டு திக்கும் எடுத்துச் சென்றவர் ராமானுஜர்.
தொழில் நகரமாக இன்று அறியப்படுகிற தூய மண்ணான ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து காஞ்சிபுரத்தில் தனது கல்வி கடமைகளை நிறைவேற்றி இந்த தேசம் முழுவதும் வைணவத்தை வியாபிக்க வைத்தவர் ராமானுஜர்.
ராமானுஜர் தனது நில உலக வாழ்வை நிறைவு செய்து திருநாடு சென்ற பிறகு… வைணவத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு அதாவது தற்போதைய நமது ஆண்டு கணக்குப்படி 1370 ஆம் ஆண்டில் அவதரித்தவர் அழகிய மணவாளன் என்கிற மணவாள மாமுனிகள்.
வைணவம் என்றாலே பெரும்பாலான சிந்தனை பரப்பில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர் ராமானுஜர் தான்.
வைணவத்தை பின்பற்றுபவர்கள், வைணக் கோட்பாடு பற்றிய கருத்தளவில் அறிந்தவர்கள், வைணவம் என்ற சித்தாந்தத்தை பற்றிய தெளிவில்லாதவர்களுக்கு கூட ராமானுஜர் என்றால் டக்கென தெரியும். ஃபெமிலியர் ஆன திருநாமமாக ராமானுஜர் என்ற பெயர் அறியப்படுகிறது.
ஆனால், மணவாள மாமுனிகள் என்றால் ஆர்வம் கொண்ட வைணவர்கள், கருத்தியலுக்கு அப்பாற்பட்ட வைணவ அறிமுகம் பெற்றவர்கள் ராமானுஜர் அளவுக்கு மணவாள மாமுனிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே நிலை. இது இன்றைய நமது சமூகத்தின் தலைக்குனிவே அன்றி ஆச்சாரியர்களுக்கானதல்ல. நாம் தூங்கிக் கொண்டிருப்பதால் சூரியன் உதிக்காமல் உன்மத்தமாக இருப்பதில்லை.

ராமானுஜருக்கு அடுத்தபடியாக இன்னும் சொல்லப் போனால் அவரது தொடர்ச்சியாக வைணவத் தொண்டு செய்த வானமாமலைதான் மணவாள மாமுனிகள்.
இரண்டாம் ராமானுஜர் என்று அனுக்க சீடர்களாலும் அனேக வைணவர்களாலும் அழைக்கப்படுகிற மணவாள மாமுனிகள் ஓர் ஞான வானம்… தத்துவப் பாற்கடல்… கொள்கை மலை… இவற்றையெல்லாம் தாண்டி மக்களின் மனச் சமவெளிகளில் ராமானுஜர் கொண்டு சேர்த்த வைணவத்தை இன்னும் ஆழம்பட நிலைநாட்டிய ஆச்சாரியர்.
வைணவத்தில் வாழித் திருநாமங்கள் வலுவானவை. ஒவ்வொரு ஆழ்வாருக்கும், ஒவ்வொரு ஆச்சாரியருக்கும் வாழித் திருநாமங்களை போற்றிப் பாடுதல் வைணவர்களின் கடமை.
அதுபோல நாம் இனிமேல் தரிசனமாகவும், தத்துவமாகவும் பார்க்க இருக்கும் மணவாள மாமுனிகளுக்கான பல்வேறு வாழித் திருநாமங்களில்,
அவரது சிஷ்யரான பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அருளிய வாழித் திருநாமங்களை ஒரு முதல் பார்வை…
திணைப் பொழுதும் தனை மறவா சிந்தை தந்தோன் வாழியே
சீர் திருவாய்மொழிப் பிள்ளை சேவடியோன் வாழியே
நினைப்பவர்கள் தம் பிறவி தனை நீக்குமவன் வாழியே
நீள் புவியில் தன் புகழை நிறுத்தினான் வாழியே
அனைத்தாழ்வார் கலைப் பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
அழகாரும் எதிராசர்க்கு அன்புடையோன் வாழியே
எனைப் போலும் பாவியர்கட்கு இரங்குமவன் வாழியே
என் அப்பன் மணவாள மாமுனிவன் வாழியே
மாமுனிகள் தரிசனம் வளரும்…













; ?>)
; ?>)
; ?>)