கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரால் சூழ்ந்து ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேல் தண்ணீர் வடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மதுரை வாசிகள் இன்னும் இதை மறக்கவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு அதுபோன்ற நிலையைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதா?
மதுரை மக்களின் தண்ணீர்த் தேவையைப் போக்க வைகை ஆறு, நகரின் குறுக்காக ஓடினாலும், மதுரையைச் சுற்றியுள்ள வண்டியூர், மாடக்குளம், தென்கால் போன்ற கண்மாய்களும், நகரின் நடுவே அமைந்துள்ள பல்வேறு திருக்கோவில்களின் திருக்குளங்களும் முக்கியத்துவம் வாய்ந்த நீராதாரமாகத் திகழ்கின்றன.
அண்மைக்காலமாக மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு பால கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தாலும், நீர்நிலைகள், வடிகால் வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தொடர் ஆக்கிரமிப்புப் காரணமாக சாதாரண மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ஒரே நாளில் 110 மி.மீ. மழையளவு பதிவானது. கடந்த 1955ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் தேதி பெய்த 115 மி.மீ.தான் மதுரை மாநகரைப் பொறுத்தவரை அதிகபட்ச மழையளவு.
அதன் பின் கடந்த வருடம் பெய்த கனமழை மதுரை செல்லூர், மீனாட்சிபுரம், பீபீகுளம், முல்லைநகர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 10 நாட்களாக இந்த நிலை நீடித்தது.
இதன் பிறகு மதுரைக்கென சிறப்பு வடிகால் திட்டங்கள் வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்தன. அதனால் செல்லூர் கண்மாயிலிருந்து தண்ணீரை நேரடியாக வைகையாற்றுக்குள் கொண்டு செல்லும் வகையில், 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க ரூ.11.9 கோடியை போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
அப்பணிகள் மட்டுமே ஓரளவுக்கு முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், “மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சீர்கேடுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஓடைகளில் குப்பைகள் நிறைந்து, ஆங்காங்கே தேங்கியுள்ள கழிவு தண்ணீரில் தேங்கும் கொசுக்களால் நோய்கள் உருவாகின்றன. போதுமான நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும்கூட மாநகராட்சி நிர்வாகம் பணிகளில் போதுமான வேகம் காட்டவில்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மழைநீர் வீட்டிற்குள்ளே புகும் நிலைதான் உள்ளது. சாலைகளும் சரியாக இல்லை. பொதுமக்களை நோகடிக்கும் வகையில்தான் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. ஊழல்மயமாகிவிட்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்களைக் கவனிக்க நேரமில்லை” என்கிறார்.
செல்லூர் கண்மாயின் மீனாட்சிபுரம் மடையிலிருந்து வெளியேறும் தண்ணீர் பந்தல்குடிக் கால்வாய் வழியே சென்று ஆழ்வார்புரம் அருகே வைகையாற்றில் கலக்கும்.
இந்த பந்தல்குடிக் கால்வாய் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் சிக்கியதுதான், கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முக்கியக் காரணம்.
கடந்த மே 31ஆம் தேதி மதுரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ வந்தபோது, செல்லூர் பாலம் ஸ்டேஷன் பகுதியில் பந்தல்குடி கால்வாயின் கரையில்தான் துணி கொண்டு மறைத்ததும், பின்னர் அது சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறுகையில், “செல்லூர் கண்மாயின் தெற்குப் பகுதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த வடிகால் அமைப்பு தற்போது ஓரளவு நிறைவு பெற்றுவிட்டது. தண்ணீரை வெளியேற்றி சோதனை செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு வெள்ளப்பாதிப்பின் காரணமாக இந்தக் கால்வாய் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. செல்லூர் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரைக் கொண்டு செல்லும் பந்தல்குடிக் கால்வாய்தான் முக்கியமாக சீரமைக்கப்பட வேண்டும். அதைத் தூர்வாரி ஆழப்படுத்தி, இரண்டு பக்கமும் சுவர் எழுப்பி, சிமெண்ட் கால்வாயாக மாற்ற வேண்டும். இதுதான் செல்லூர் பகுதி மக்களின் கோரிக்கை. ஆனால் தமிழக அரசு ரூ.100 கோடிக்கு மேல் செலவாகும் என்பதால், நிதி காரணமாக இப்பணியை மேற்கொள்ள மறுக்கிறது. அதேபோன்று செல்லூர் கண்மாயைத் தூர்வாரி ஆழப்படுத்தினால் வெள்ளப்பாதிப்பை இன்னும் கட்டுப்படுத்த முடியும். மதுரை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து இப்பணியை மேற்கொண்டால்தான் செல்லூர் பகுதி மக்களின் மழைக்கால அவதியைப் போக்க முடியும்” என்கிறார்.
பருவ மழையை எதிர்கொள்ள மதுரை தயாராகிவிட்டதா என்று மதுரை மாநகராட்சி உயரதிகாரிகளிடம் பேசினோம்.
“இந்திய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் அக்டோபர் 1 முதல் 27ஆம் தேதி வரை சராசரியாக 308 மி.மீ. மழை பெய்தது. ஆனால் சராசரியாக இதே மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் 149.4 மி.மீ.தான் பெய்துள்ளது. ஆகையால் இயல்பைவிட கடந்த ஆண்டு 107 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது என்பதைக் கணக்கிட்டு போர்க்கால அடிப்படையில் மதுரை மாநகரில் குறிப்பாக மதுரையின் வடக்குப் பகுதியில் வடிகால் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி விரைவாக மேற்கொண்டு வருகிறது.
பந்தல்குடி கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளன. ஆகையால் தண்ணீர் தடையின்றி வழிந்தோடி வைகை ஆற்றில் கலக்கும். குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புக நேரிடாது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டு பாதிப்புகள் நேர வாய்ப்பு குறைவுதான்” என்கின்றனர்.
மதுரைக்கு (மழை)காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
