கூட்டணிகளை மாற்றும் கரூர் சம்பவம்…விஜய் முக்கிய முடிவு
சண்முகமும் பாண்டியனும் வாக்கிங்கை தொடங்கிய போது கரூர் சம்பவமே தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது.
பாண்டியன் இது தொடர்பாக தன்னிடமிருந்த செய்திகளை சொல்ல ஆரம்பித்தார்.
“தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்தை திருச்சியில் தொடங்கினார். தொடங்கிய அன்று திருச்சி, அரியலூர் பெரம்பலூர் என மூன்று மாவட்டங்கள் திட்டமிட்டு இருந்த போதும் கட்டுக்கடங்காத கூட்டம், அதனால் ஏற்பட்ட கால தாமதம் ஆசியவற்றால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை.
அதன்பின் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்றவர் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு மக்கள் சந்திப்பு பிரச்சாரத்துக்கு திட்டமிட்டார்.
ஆனால் செப்டம்பர் 27ஆம் தேதி மாலை நேரம் கரூர் இந்திய அளவில் அதிர்ச்சி செய்திகளில் இடம் பிடித்தது.
விஜயை பார்க்கக்கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பத்து குழந்தைகள் 17 பெண்கள் 13 ஆண்கள் என 42 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். செப்டம்பர் 27ஆம் தேதி நள்ளிரவே சென்னையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானத்தில் கிளம்பி திருச்சி வந்து அங்கிருந்து அதிகாலை கரூருக்கு சென்றார்.
மறுநாள் 28ஆம் தேதி காலை அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இப்படி ஒவ்வொரு கட்சித் தலைவராக கரூருக்கு படையெடுத்தனர். ஆனால் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரவில்லை.
இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் திட்டமிட்ட சதிதான் என்றும் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் தமிழக வெற்றி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
அதே நேரம் சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களுக்குள் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். புசி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்ட நெரிசல் முழுக்க முழுக்க விஜயின் அலட்சியத்தால் தான் ஏற்பட்டது என்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், கரூர் கலெக்டர், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, ஆ ராசா, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என அனைவரும் ஒரே குரலில் விஜய்க்கு எதிராக பேசி வருகிறார்கள்.
இதற்கிடையில் தான் இந்த கரூர் கொடூரத்துக்கு தேசிய கட்சிகளான பாஜக காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ்நாட்டு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசின் சார்பில் பிரதமர் மோடியின் பிரதிநிதியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து என்ன நடந்தது என்பதை கேட்டறிந்தார்.
அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹேமமாலினி தலைமையில் எம்பிக்கள் குழு அமைக்கப்பட்ட அவர்களும் கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவராக சந்தித்து அந்த இடத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தனர்..
மத்தியில் ஆளும் பாஜக சார்பில் இப்படி என்றால், டெல்லியில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் முதலமைச்சர் ஸ்டாலினையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அது மட்டுமல்ல தனக்கு நெருக்கமான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபாலை கரூருக்கு அனுப்பி அங்கே நடந்தவற்றை அறிக்கையாக கேட்டிருக்கிறார் ராகுல் காந்தி.
மாநில அரசியலில் திமுகவும் திமுக அரசும் இந்த சம்பவத்தில் விஜய்க்கு எதிரான விஷயங்களை கூர் தீட்டி கொண்டிருக்கிற நிலையில்… மத்திய அரசின் குழுவும் காங்கிரஸ் கட்சியின் குழுவும் என்ன சொல்லப் போகின்றன என்பது எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் தேசிய கட்சிகள் இந்த கரூர் சம்பவத்தை பயன்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாட்டு அரசியல் கூட்டணிகளை மாற்றலாம் என்று கணக்கு போடுகின்றன.
பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவும் இப்போது கூட்டணி வைத்திருக்கின்றன. இந்த கூட்டணியில் தமிழக வெற்றி கழகமும் இடம்பெற வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். திமுக ஆட்சி அகற்ற வேண்டுமானால் அண்ணன் எடப்பாடியாருக்கு தம்பி விஜய் தோள் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையான சிபிஐ விசாரணை என்ற கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி ஆதரித்துள்ளது.
கரூர் சம்பவத்துக்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது என விஜயின் குரலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எதிரொலித்துள்ளார். இது மட்டுமல்ல தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆய்வு குழுவும் இந்த ரீதியில் தான் தங்களது முதல் கட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
எனவே இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு… தமிழக வெற்றி கழகத்திற்கு திமுகவிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமானால் அது அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தால்தான் சாத்தியம் என்ற ஒரு கருத்துருவை பாஜகவும் அதிமுகவும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ராகுல் காந்தி- விஜயிடம் தென் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்தபடியே பேசி இருக்கிறார். அதுமட்டுமல்ல ராகுல் காந்தியின் நிழலான வேணுகோபால் கரூருக்கு வந்து ஆய்வு செய்து இருக்கிறார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை இல்லை என்று தொடர்ந்து உள் அரங்குகளிலும் ராகுல் காந்தியிடமும் பேசி வரும் மாணிக் தாக்கூர் உள்ளிட்ட எம்பிக்கள் இந்த கரூர் சம்பவத்தை பயன்படுத்தி திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி தமிழக வெற்றிக்கழகத்தோடு இணைய வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு கௌரவமான இடங்களில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் உடனான கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கும். அது மட்டும் அல்ல விஜயோடு கூட்டணி சேர்ந்தால் அண்டை மாநிலமான கேரளாவில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அங்கே இருக்கிற விஜய் ரசிகர்கள் மூலம் மிகப்பெரும் ஆதாயம் கிடைக்கும். எனவே தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் இன்றைய சூழ்நிலையில் மேலும் சில கட்சிகளும் அதில் சேர வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் டாக்டர் செல்லகுமார் உள்ளிட்டோர் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்படி தமிழக வெற்றி கழகத்திற்கான கிராக்கி தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் என இரண்டு தரப்பாலும் அதிகரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்பதுதான் கள நிலவரம்.
அதனால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் விஜய் மீது எஃப் ஐ ஆர் போடுவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கரூர் சம்பவத்தில் விஜயை ஏ1 குற்றவாளியாக ஆக்கி வழக்கு தொடுத்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் அது மேலும் விஜய்க்கு அரசியல் ஆதாயத்தையே ஏற்படுத்தும் என்பது தான் ஸ்டாலின் கணக்கு.
அதனால்தான் விஜய்யை விட்டு விட்டு அவரோடு இருக்கிற மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் பணியில் இறங்கிவிட்டது தமிழ்நாடு போலீஸ். இதன் மூலம் விஜயின் அரசியல் இயக்கத்தை முடக்கி அவருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவது தான் திமுகவின் திட்டமாக இருக்கிறது.
இப்படி மாநில தேசிய அளவில் தனக்கு ஆதரவாகவும் தனக்கு எதிராகவும் நடக்கும் அரசியல் காய் நகர்த்தல்களை அறிந்து கொண்டதால்தான்… செப்டம்பர் 30ஆம் தேதி விஜய் தைரியமாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சிஎம் சார் உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என் மீது கை வையுங்கள். என்னுடைய தொண்டர்களை விட்டு விடுங்கள் என தன்னுடைய கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில் கரூர் கூட்டல் நெரிசலில் 41 உயிர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மாநில அரசியலின் கூட்டணியே மாற்றி அமைக்கும் அளவுக்கு வலிமையானதாக மாறி இருக்கிறது என்பதுதான் இப்போதைய அப்டேட்” என்று ஒரே மூச்சில் பாண்டியன் சொல்லி முடித்தார்.
சண்முகம் கரூர் வீடியோ காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்தபடியே மௌனமாக அமர்ந்தார்.
