அன்பகம் மூலம்
அச்சாரம் போடும் ஈரோடு பிரகாஷ் எம்பி!
திமுகவின் அதிகாரபூர்வ அன்பகமாக சென்னைக்கு வெளியே முதன் முறையாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் பிரம்மாண்டமாக கட்டப்பட இருக்கிறது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி அதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் ஈரோடு எம்பியும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான ஈரோடு பிரகாஷ்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இளைஞர் அணி அறக்கட்டளை சார்பாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் ஏற்பாட்டில் இந்த அன்பகம் உதிக்கப் போகிறது.
ஈரோடு டு வெள்ளகோவில் மெயின் ரோடு மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் அருகில் அன்பகம் அமைகிறது.
தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக அதிகாரபூர்வ அன்பகம் மொடக்குறிச்சியில் அமைவது ஏதோ எதேச்சையானது அல்ல.
“துணை முதல்வரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும்” என்று இப்போது அன்பகத்துக்கான அடிக்கல் நாட்டுகிற ஈரோடு எம்பி பிரகாஷ் பேசிய நிலையில், இப்போது முதல் அன்பகம் மொடக்குறிச்சியில் அமைகிறது.
எனவே உதயநிதி மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு இது மேலும் வலு சேர்க்கிறது.
கடந்த 2024 செப்டம்பர் 11 ஆம் தேதி திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி முன்னிலையில் ஈரோடு மேட்டுக் கடை பகுதியில் தனியார் அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய எம்.பி.யான ஈரோடு பிரகாஷ்,
“வருகிற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நமது இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான அண்ணன் உதயநிதி அவர்கள், கொங்கு மண்டலத்தில் போட்டியிட வேண்டும்.
அதுவும் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
2024 எம்பி தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியான மொடக்குறிச்சியில் 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அண்ணன் உதயநிதி கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பதை உங்கள் (கட்சி நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள்) சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று கூற கூட்டத்தில் இருந்து பலத்த கரகோஷம் எழுந்தது.
நிறைவாக பேசிய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியும் ஈரோடு பிரகாஷின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன் என்று கூறினார்.
கொங்கு மண்டலம் அதிமுக பலம் மிகுந்த பகுதியாக அறியப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல்களில திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றாலும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவே பெரும் வெற்றி பெறுகிறது.
இந்த நிலையில் உதயநிதியை கொங்கு மண்டலத்தில் போட்டியிட வேண்டும் என அப்போது குரல் கொடுத்த ஈரோடு எம்.பி. பிரகாஷிடம் இப்போது அரசியல் டுடே சார்பாக பேசினோம்.
“ தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னைக்கு வெளியே இளைஞரணிக்கு அலுவலகமான அன்பகத்தை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் அமைப்பதில் பெருமைப்படுகிறோம். கொங்கு பகுதியில் திமுக மிக வலுவாக இருக்கிறது. துணை முதல்வர் அவர்கள் கொங்கு மண்டலத்தில் போட்டியிட்டால் மேலும் ஊக்கமாக திமுகவினர் பணியாற்றுவார்கள்” என்றார் பிரகாஷ் எம்பி.
திமுக வட்டாரங்களில் பேசியபோது, “ 1991 இல் அப்போதைய முதலமைச்சர் வேட்பாளரான ஜெயலலிதா கொங்குமண்டலம் காங்கயத்தில் போட்டியிட்டார். ஜெயலலிதாவே கொங்கு மண்டலத்தில் போட்டியிடுகிறார் என்றதும் கொங்கு அதிமுகவினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றினர்.
இந்நிலையில் இப்போது கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி என்பது மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. அதனால்தான் எங்கள் வருங்கால தலைவரான அமைச்சர் உதயநிதி, கொங்குமண்டலத்தில் போட்டியிட்டால் திமுக எழுச்சி பெறும் என்ற நோக்கத்தில்தான் பிரகாஷ் இந்த அன்பகத்தை மொடக்குறிச்சியில் அமைக்கிறார்” என்றனர்.
கடந்த ஜூன் மாதம், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி கேஎம்சி நகரில் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம் தேனி வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரா.அருள் வாசகனின் சொந்த இடத்தில் திறக்கப்பட்டது. இதை தேனி வடக்கு மாசெவும், எம்பியுமான தங்க தமிழ் செல்வன் திறந்து வைத்தார் என்பது இங்கே நினைவுகூறத் தக்கது.
