ராஜபாளையம் நகராட்சியை
வெளுத்து வாங்கும் பப்ளிக்!
சிறந்த நகராட்சி என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு அரசு விருது கொடுத்தாலும், ராஜபாளையம் மக்கள் கொடுக்கும் விருதோ வேறு மாதிரி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி ஒரு மாநகராட்சிக்கு இணையான நகராட்சியாக செயல்பட்டு வருகிறது மாநகராட்சி அந்தஸ்து பெரும் அளவிற்கு இந்த பகுதிகளில் சாலைகள் அதிகம். அதேபோல் தொழிற்சாலைகளும் அதிகம்.
இராஜபாளையத்தில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது 42 வார்டுகளிலும் சொத்து வரி சென்னை மாநகராட்சிக்கு இணையாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
சிறந்த நகராட்சி என தமிழக முதல்வரிடம் இருந்து இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷியாமம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் இருவரும் கடந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி விருது வாங்கினார்கள்
இராஜபாளையம் நகராட்சியில் 42 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையாக திமுக கவுன்சிலர் 37 பேரும், காங்கிரஸ் 3 பேர், அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், ‘சிறந்த’ நகராட்சியான ராஜபாளையம் நகராட்சியின் கூட்டம் கடந்த நான்கு மாதங்களாக நடக்காமல், கடந்த செப்டம்பர் 24 இல், நகர்மன்ற தலைவர் ஏ.ஏ.ஏஸ் பவித்ரா ஷ்யாம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறந்தநகராட்சி என விருது பெற்றதற்காக நகர்மன்ற தலைவருக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்து. அதன் பின் கூட்டத்தில் ஒரேயடியாக 207 தீர்மானங்கள் வைக்கப்பட்டு ஏக் தம்மில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் 18 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சோலைமலை, “நான்கு மாதங்கள் கழித்து கூட்டம் நடத்தினால் எப்படி எங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை எப்படி பேச முடியும்?” என கேள்வி கேட்க, திமுக கவுன்சிலர் திருமலை குமாருக்கும் சோலைமலைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல் நான்காவது வார்டு அதிமுக கவுன்சிலர் மீனாட்சி பேசும் பொழுதும் திமுக கவுன்சிலர்கள் இடையூறு செய்து பேசியதால் கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது .
யூனிகோடு வாங்குவதற்காக கூட்டத்தை நான்கு மாதங்கள் நடத்தவில்லை. அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி நகர்மன்ற தலைவர் எழுந்து சென்று விட்டார் .
இதுகுறித்து 18 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சோலைமலையிடம் அரசியல் டுடே சார்பாக பேசினோம்.
“3 ஆவது முறையாக கவுன்சிலராக இருக்கேன். இதுக்கு முன் பல நகரமன்றத் தலைவர்களை பாத்திருக்கேன். எந்த ஒரு கேள்வி எழுப்பினாலும் நகரமன்ற தலைவர் அல்லது அதிகாரிகள் தான் பதில் கூறுவார்கள். ஆனால் தற்போது நகர மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு 12 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமலை குமார் பதில் அளிக்கிறார். இவர் தான் நகர் மன்ற தலைவரா இல்ல அதிகாரியா ?
சிறந்த நகராட்சி என விருது பெற்ற இராஜபாளையம் நகராட்சி சுகாதாரப் பணியில், சாலை வசதியில் நம்பர் ஒன் நகராட்சியாக வந்திருக்க வேண்டும். இது எதுவுமே செய்யாமல் வரி வசூலில் மட்டும் விருது பெற்றிருக்கிறது.
மக்கள் பிரச்சினைகள் நிறைய இருக்கும்போது நான்கு மாதங்கள் கழித்து கூட்டம் போடுவது எந்த விதத்தில் நியாயம்? பேக்கேஜில் பணிகள் ஒதுக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட பணிகள் முறையாக முடியவில்லை” என்றார்.
இதுகுறித்து நகர் மன்ற தலைவி பவித்ரா ஷ்யாமிடம் கேட்ட பொழுது,
“இராஜபாளையம் நகராட்சியில் 560-க்கும் மேற்பட்ட குறுகிய சாலைகள் உள்ளது. அதாவது 4 கிலோமீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளை சாலைகளாகவும் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே உள்ள பகுதிகளை தெருக்களாகவும் அதற்கு கீழ் உள்ள சாலைகளை குறுகிய இடம் எனப் பிரித்து அதற்கு யூனிக்கோட் ப்ராசஸிங் முடிந்து கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்றி வருகிறோம். இனிவரும் காலங்களில் இராஜபாளையம் நகரத்திற்கு என பின்கோடு உள்ளது போல் ஒவ்வொரு தெருவிற்கும் குறுகிய சந்துக்கும் நம்பர் வந்துவிடும்.
அப்பொழுது எந்த பகுதியில் வேலையில் நடைபெறவில்லை, எந்த பகுதியில் வேலை நடைபெற்றுள்ளது என்பதை நாம் கம்ப்யூட்டர் மூலம் கண்டறிய முடியும். இந்தத் திட்டங்களை நான் நகர் மன்ற தலைவியாக இருக்கும்பொழுதே செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறேன்.
நான் 42 வார்டு கவுன்சிலர்களையும் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் அவர்களுக்கு பதில் அளிக்கிறேன். இருப்பினும் நான் சார்ந்துள்ள கட்சியில் சார்பில் சில கவுன்சிலர்கள் அவருடைய கருத்துக்களை முன்வைத்தனர்” என்கிறார்.
ராஜபாளையம் நகராட்சியின் பொதுமக்கள் சிலரிடம் பேசினோம்.
18 வது வார்டு வசந்தம் நகர் வெங்கட்ராமன் நம்மிடம், “இந்த பகுதிகளில் கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. நாங்களும் பலமுறை மாவட்ட ஆட்சியர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நகர் மன்ற தலைவி என அனைவரையும் சந்தித்து எங்களுடைய கோரிக்கை முன் வைத்துள்ளோம். ஒன்றும் நடக்கவில்லை.
எங்களிடம் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முன்வராதது ஏன்?” என்றார்.
விருதுவாங்கினால் போதுமா என்பதுதான் ராஜபாளைம் நகராட்சி மக்களின் மைண்ட் வாய்ஸ்!
