• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வாக்கிங் டாக்கிங்…

ByAra

Sep 29, 2025

தீப்பிடிக்கும் திமுக கூட்டணி…
ஸ்டாலின் திக் திக்!

திமுக தனது கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால் இப்போது திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றிலும் திமுகவுக்கு எதிராக புரட்சி வெடித்துக் கொண்டுள்ளது” என்று பீடிகைபோட்ட பாண்டியன் அதுபற்றிய விவரங்களைப் பட்டியலிட்டார்.

 “திமுக கூட்டணியில் அதிக சலசலப்புக்குள்ளான கட்சி விசிகதான். இப்போது மீண்டும் விசிகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விசிகவுக்குள் இருந்து  ஆட்சியில் பங்கு என்ற குரல் எழுப்பிய ஆதவ் அர்ஜுனாவை, விசிகவில் இருந்தே நீக்க வைத்தது திமுக. காரணம் விசிகவில் இருக்கும் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் விசிக தலைவர் திருமாவளவனை விட ஸ்டாலினோடுதான் நெருக்கமாக இருக்கிறார்க்ள்.

விஜய் நாகப்பட்டினத்தில் அம்மாவட்ட பிரச்சினைகளைதான் பேசினார். ஆனால் விஜய்க்கு திமுக நேரடியாக நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ்தான் விரிவான பதிலளிக்க வேண்டும். ஆனால், விசிகவுக்குள் மீண்டும் ஒரு நெருடலை உண்டாக்கும் வகையில் ஆளூந் ஷாநவாஸை விட்டு பதிலளிக்க வைத்தது திமுக.

இதன் மூலம் திருமாவுக்கே ஆளூர் ஷாநவாஸ் மீது வருத்தமும் கோபமும் ஏற்பட்டுள்ளது. இப்படி விசிகவுக்குள் விளையாட ஆரம்பித்துவிட்டது திமுக.

வெளியே கொள்கைக் கூட்டணி என்று பேசிக் கொண்டு உள்ளே விசிகவின் இரு எம்.எல்.ஏ.க்களை தன் வசம் வைத்துக் கொண்டு திருமாவுக்கு பலமான நெருக்கடி கொடுக்கிறது திமுக.

**தீப்பற்றி எரியும் திமுக-மதிமுக உறவு…**

மதிமுகவை திமுக என்றைக்குமே மதித்ததில்லை. சமீபத்தில் இளையராஜாவுக்கு அரசு நடத்திய பாராட்டு விழாவில் இன்பநிதிக்கு அருகே வைகோவுக்கு இருக்கை ஒதுக்கியது வரை!

நாடாளுமன்றத் தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் போராடி நின்றார் துரை வைகோ.  அப்போதே அமைச்சர் நேருவுக்கும் துரை வைகோவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. நேருவுக்கு முன்பே டேபிளை அடித்து பேசினார் துரை வைகோ.

இதைத்தான் பிறகு ஸ்டாலின் எழுதிய ஒரு அறிக்கையில், ‘நாம் ஊதியணைக்க தீக்குச்சி கிடையாது.. உதயசூரியன்’ என்று துரை வைகோவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் மதிமுகவில் மல்லை சத்யா பிரச்சினை வந்ததும் அதை திமுக பயன்படுத்திக் கொண்டது.

மல்லை சத்யா மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் மல்லை சத்யா எங்கே கேட்டாரோ அதே இடத்தில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுத்தது. இது வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.,

மேலும், மல்லை சத்யா செப்டம்பர் 15  காஞ்சி புரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா நடத்தினார். அதற்கும் திமுகவும் அரசும் போலீசும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இதே நேரம்  வைகோ திருச்சியில் செப்டம்பர் 15 இல் நடத்திய மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஸ்டாலின் அதில் கலந்துகொள்ளவில்லை.

மல்லை சத்யாவை தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த திமுக தயாராக இருக்கிறது. விரைவில் மல்லை சத்யா தனிக்கட்சி தொடங்க இருக்கிறார்.

ஏற்கனவே துரை வைகோ பிரதமர் மோடியை, மத்திய அமைச்சர்களை அடிக்க சந்திப்பதால்  கோபத்தில் இருக்கும் ஸ்டாலின்…கடைசி நேரத்தில் மல்லை சத்யாவுக்கு சீட் கொடுத்து மதிமுகவை கழற்றிவிடும் நோக்கில் இருக்கிறார்.  வைகோ முன்பு பிரச்சார பீரங்கியாக இருந்தார். ஆனால் வரும் தேர்தலில் அவரால் பிரச்சார பீரங்கியாக செயல்பட முடியாது. எனவே மல்லை சத்யாவை திமுக வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. இது வைகோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே ராஜ்யசபாவை பறித்தாகிவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தீப்பெட்டி சின்னம் இத்தனை சீட் வேண்டும் என்று வைகோ வற்புறுத்தினால். மல்லை சத்யாவுக்கு ஒரு சீட் கொடுத்துவிட முடிவு செய்துள்ளார் ஸ்டாலின்.

பதிவு ரத்தாக காரணமே திமுகதான்: மமகவில் போர்க்கொடி!

மனித நேய மக்கள் கட்சியின் பதிவையே ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவோ, பொதுச் செயலாளர் அப்துல் சமதுவோ  மேல் முறையீடு செய்ய முடியாது.

ஏனென்றால் ஜவாஹிருல்லாவும், அப்துல் சமதுவும் திமுகவில் சேர்ந்து திமுக உறுப்பினர் கார்டு வாங்கித்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். எனவே அவர்கள் இப்போது தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலும், சட்டமன்றப் பதிவுகளிலும் திமுக உறுப்பினர்கள்தான். அதனால் திமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்களால் மனிதநேய மக்கள் கட்சிக்காக மேல் முறையீடு செய்ய தகுதியே இல்லை.

இப்படி ஒரு சூழலை உருவாக்கியவர் ஸ்டாலின்.

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது மமக. அப்போது அக்கட்சிக்கு  ஆம்பூர், சேப்பாக்கம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கிய அம்மா ஜெயலலிதா, மமக கோரியதால் தனிச் சின்னத்தில் போட்டியிடவும் சம்மதித்தார். இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும் வென்றனர்.

ஆனால் அம்மா கொடுத்த இந்த எம்.எல்.ஏ. பதவிகளை வைத்துக் கொண்டு 2013 இல் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியை ராஜ்யசபா தேர்தலில் அவர்கள் ஆதரித்து துரோகம் செய்தனர். அப்போதே அம்மா அவர்களை கைவிட்டுவிட்டார்.

அதன் பின் இன்றுவரை மமகவால் சொந்த சின்னத்தில் நின்று ஜெயிக்க முடியவில்லை.

கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று ஸ்டாலின் கறாராக இருந்ததால், அவர்கள்  சொந்த சின்னத்தில் நிற்கவில்லை. எனவேதான் தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி நோட்டீஸ் அனுப்பி பதிவை ரத்து செய்திருக்கிறது.

”அம்மா நம் கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்தார். ஆனால் ஸ்டாலின் நம் பதிவையே ரத்து செய்யவும் வைத்துவிட்டார். இத்தனைக்கும் பிகார் தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் பற்றியெல்லாம் வாய்கிழிய பேசும் ஸ்டாலின் மமகவின் பதிவு ரத்து செய்யப்பட்டது பற்றி கவனமாக தவிர்த்து வருகிறார். இனியும் இந்த கூட்டணியில் நாம் இருக்கலாமா?” என்று மமகவுக்குள் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

இப்படி சின்னச்சின்ன கட்சிகளுக்கு பெரும் இடைஞ்சல் கொடுத்துவரும் திமுக, கூட்டணியின் பெரிய கட்சியான காங்கிரசையும் விட்டு வைக்கவில்லை.

சமீபத்தில் திமுகவின் கரூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியை திமுக முப்பெரும் விழாவில் வானளாவ புகழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த முப்பெரும் விழா முடிந்த சில தினங்களில்… கரூர் நகர மகளிர் காங்கிரஸ் தலைவர் கவிதாவை திமுகவில் சேர்த்துக்க் கொண்டார் செந்தில்பாலாஜி.

இது காங்கிரசுக்குள் பலத்த சலசலப்புகளை ஏற்படுத்தியது. மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா அந்த பதவியில் அப்படி ஒருவர் இல்லை என மறுத்தார்.  

இந்நிலையில் அர்ஜெண்டினாவில் இருந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

”கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர்  காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல்,ஒத்துழைப்பு,நம்பிக்கை   மற்றும் மரியாதையின் அடிப்படையில்  உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ,காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய  கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.

கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் திரு. செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்” என்று சொல்லியுள்ளார் ஜோதிமணி.

தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜியின் அந்த   பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது” என்று பாண்டியன் பட்டியலிட்டு முடித்தார்.

பொறுமையாக கேட்ட சண்முகம், “திமுக கூட்டணியில் பாக்கியிருப்பது இரு கம்யூனிஸ்டுகள்தான். அவர்களுக்கும் ஏராள பிரச்சினைகள் இருந்தாலும் 25 கோடி எங்களுக்கு மட்டுமா கொடுத்தார்கள் என்று முத்தரசன் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது” என்று சிரித்துக் கொண்டார்.

வாக்கிங் முடிந்தது. டாக்கிங் தொடர்ந்தது.

Ara