தேனி அருகே தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 மற்றும் 10வது வார்டு பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிலும் பலமுறை கழிவுநீர் கலந்த குடிநீராக வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
சுகாதாரமற்ற முறையில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதால் வேறு வழி இன்றி அந்த குடிநீரை வடிகட்டி வைத்து சேமித்து அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த குடிநீரை பயன்படுத்துவதால் சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கும் அப்பகுதிவாசிகள் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தங்கள் பகுதிகளுக்கு முறையாக சுத்தமான குடிநீரை வழங்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.