தான் முதன்முதலாக உறுப்பினராக இருந்த வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு தனது வாழ்நாள் முழுதும் சேகரித்த சட்டப்புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் நாடக சாலைத்தெருவைச் சேர்ந்தவர் டி. சீனிவாச ராகவன். (வயது 89) வழக்கறிஞரான இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். ராஜாஜி துவக்கிய சுதந்திரா கட்சியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நகர் மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று அங்கு தனது தொழிலைத் தொடர்ந்தார். சென்னையில் 50 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த அவர், முதுமையின் காரணமாக உடல் நலிவடைந்தார். தான் கற்ற சட்டக்கல்வி எப்படியாவது தனக்கடுத்து வருகிற இளைய தலைமுறையைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தான் வாழ்நாள் முழுதும் சேகரித்து வைத்திருந்த சட்டப்புத்தகங்கள் அனைத்தையும் தன்னை உருவாக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு நன்கொடையாகத் தருவதற்கு முடிவெடுத்தார்.
அதன்படி, தன்னிடம் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சட்டப் புத்தகங்களின் மொத்த மதிப்பு ரூபாய் ஐந்து லட்சமாகும். இதைப் பெற்றுக் கொண்ட சங்கத்தின் தலைவர் டி. ராசையா, துணைத்தலைவர் எஸ். உமாபதி, செயலாளர் ஜெயராஜ், நூலகர் பாண்டிச் செல்வம், மூத்த வழக்கறிஞர் வை. வைகுண்டம், ஞான பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் டி. சீனிவாச ராகவனுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த நன்கொடைக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.ரவி என்ற சீனிவாசன் மற்றும் மூத்த வழக்கறிஞர் எழுத்தாளர் எஸ். ரமேஷ் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.