மாநாடு சொல்லும் மெசேஜ்!
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆவது வெள்ளிவிழா மற்றும் சமூக, சமத்துவ மாநில மாநாடு ஆகஸ்டு 24 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்தது.
மாநாடு தொடங்குவதற்கு மூன்று நாளைக்கு முன்பே திண்டுக்கல் மாநகரில் தமமுக
தொண்டர்கள் சுழன்று பணியாற்றினர். காணும் திசையெல்லாம் கட்சிக் கொடிகள் பறக்க விடச் செய்தனர்.
மாநா்ட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஜி, புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் திரு. ருசேந்திர குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜி .கே. வாசன் ரயிலில் வந்து இறங்கிய போது மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பாஜகவினரும், முன்னாள் எம்பி சித்தன் தலைமையில் த.மா.கா.வினரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்நிலையில் மாநாடு தொடங்கிய உடன் வந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை ஜான் பாண்டியன் மேடையில் இருந்து எழுந்து சென்று வரவேற்றார்.
கடைசி வரைக்கும் தொண்டர்கள் கூச்சலிட்டு கொண்டும், மேடையை சுற்றி நின்று கொண்டும் இருந்தது மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களை எரிச்சல் அடையச் செய்தது. ஜான் பாண்டியன் அவ்வப்போது எழுந்து தொண்டர்களை அமைதியாக இருக்கைக்கு செல்லுமாறு கூறியும், சில தொண்டர்கள் அடம்பிடித்தது அவரையே டென்சனின் உச்சிக்கு கொண்டு சென்றது.
மாநாட்டில் பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர வேளாளர் சமுதாயம் வெளியேற வேண்டும் என்பது முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
பேசியவர்களில் திருமாறன்ஜி பேசியது தொண்டர்களை அதிக உற்சாகப்படுத்தியது.
“தேவேந்திர குல சமுதாயமும், தேவர் சமுதாயமும் ஒன்றாகத்தான் இருந்தோம். திராவிடம் வந்து தான் நம்மை பிரித்தது” என அவர் பேசினார்.
அந்த நேரத்தில் யாரோ ஒருவர் வெளியில் பட்டாசு வெடிக்க, வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டு தொண்டர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இவர்களை அமைதிப்படுத்தி உட்கார செய்வதற்குள் போதும் போதும் என்று விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஆகிவிட்டது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படுவது உறுதி, உங்களுக்கெல்லாம் விரைவில் நல்ல செய்தி வரும்” என பேசினார்.
ஜான் பாண்டியன் பேசும்போது,
”இங்க கூடியிருப்பது சாதாரண கூட்டம் அல்ல சமூக விடுதலைக்கான கூட்டம். நமது போராட்டம், சமத்துவதற்கான போராட்டம். அதற்கான மாநாடு தான் இது. நான் பள்ளியில் படிக்கும் போது sc ஸ்காலர்ஷிப் கொடுப்பார்கள். பள்ளியில் கையை உயர்த்தி சாதி முத்திரை படுத்தினார்கள். சாதியை கூறி அடிமைப்படுத்தினார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் மக்களுக்காக போராட ஆரம்பித்தேன். தெரு தெருவாக வீதி வீதியாக சென்று சிவப்பு பச்சைகளை கொடிகளை ஏற்றினேன். அடுத்த சாதிகளை பற்றி நான் பேசியது இல்லை. அன்றைய ஆட்சியாளர்கள் என் மீது விஷத்தை தூவினார்கள். என் மீது பல வழக்குகள் போடப்பட்டன.
இனிமேல் சாதிக்கு இடமில்லை சமத்துவத்துக்கு தான் இடம். அது தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். மக்கள் மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அதற்காக போராட வேண்டும். உரிமைக்காக பாடுபட வேண்டும்.
சாதிக்காக பாடுபட வேண்டாம். சமத்துவதற்காக பாடுபட வேண்டும். நம்முடைய வெற்றி சுயமரியாதை வெற்றி. தேவேந்திர குல வேளாளர்கள் தான் நாட்டிற்கு சோறு போடுகின்ற கூட்டம், உழைக்கின்ற கூட்டம். நரேந்திர மோடி அவர்களால் தேவேந்திர வேளாளர்கள் என்று கொடுக்கப்பட்டது.
தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலின சாதி கிடையாது. பட்டியலினத்தில் வெளியே செல்ல இருக்கிறோம். அதற்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும். நமது கோரிக்கைக்கான தீர்வை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தர முடியும். வேறு எந்த பிரதமர் வந்தாலும் நமக்கு தர மாட்டார்கள்” என்று பேசினார். .
பேசியவர்கள் அனைவரும் பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், ஜான்பாண்டியன் மகனான கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் வியங்கோ , மகளும் கட்சியின் மகளிரணித் தலைவியுமான வினோலின் நிவேதா பெயரை மறக்காமல் கூறி, அவர்கள்தான் கட்சியின் எழுச்சி சிங்கங்கள் என புகழாரம் சூட்டினார்கள்.
தொண்டர்கள் இடையே, இந்த விழா மகனுக்கும் மகளுக்கும் மகுடம் சூட்டு விழாவா என்று கேட்கும் அளவுக்கு அதிக அளவு போஸ்டர்களும் பேனர்களும் அவர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது.
ஜான் பாண்டியனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, “ வரும் தேர்தலில் 25 சீட்டுகளில் பேச்சைத் தொடங்குவார் ஜான் பாண்டியன். எல்லாம் போகப் போகத் தெரியும்” என்றனர்.














; ?>)
; ?>)
; ?>)