ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்ய உள்ள மத்திய அரசு உணவகங்களுக்கு உள்ளீட்டு வரி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு கோரிக்கை வைத்துள்ளார்.

நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கடசுப்பு இவ்வாறு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாட்டில் பல இடங்களில் உணவகங்களை இரவு 10 மணிக்கு மேல் திறப்பதற்கு காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டினார். காவல்துறை உயர் அதிகாரிகள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்து இருக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கடிதம் அனுப்பிய பிறகும் இவ்வாறு நடப்பதாக தெரிவித்தார்.
சிறிய உணவகங்களுக்கும் சுற்றுச்சூழல் துறை மற்றும் தீயணைப்பு துறை அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தேனீர் விலை உயர்வு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர் பால் மற்றும் காப்பித்தூளின் விலை அதிகரித்துள்ளதால் மூன்று வருடங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் தேநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு ஹோட்டல் தொழிலை பாதிக்காது என்றாலும் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் அந்நிய நாட்டு பானங்களை விற்பனை செய்வதை தவிர்க்க போவதாக தெரிவித்தார்.
பெப்சி, கோக், KFC, மினரல் வாட்டர் உள்ளிட்ட அந்நிய தயாரிப்புகளை தவிர்த்து, தமிழ்நாடு மற்றும் இந்திய தயாரிப்புகளை விற்பனை செய்யும் வகையில் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பாக அறிவிக்க உள்ளதாக கூறினார். இதேபோல அதிக சேவை கட்டணம் வசூல் செய்யும் swiggy zomoto உள்ளிட்ட உணவு செயல்களை புறம் தள்ளி தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். இதன் காரணமாக அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாமல் தமிழ்நாடு உணவு செயலியில் அவர்களை பணியில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அறிவித்துள்ளார்.