நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 4 வது புத்தக கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. வெறும் புத்தகம் மற்றும் இல்லாமல் குழந்தைகள் , மாணவர்கள், பொது மக்களை ஈர்க்கும் வகையில் கோலரங்கம், அறிவியல் கண்காட்சி, இசை வாத்தியங்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் அரசு பள்ளி குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பாலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களை குட்வெல் பவுண்டேஷன் நிறுவனர் ஜெயபிரகாஷ் தனது சொந்த செலவில் வேன் மூலமாக அழைத்து வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட வைத்து அவர்களுக்கு தேவையான பயனுள்ள புத்தகங்களை வாங்கி கொடுத்தார்.

தொடர்ந்து அவர்களை கோலரங்கம், இசைக்கருவி, ஓவிய கண்காட்சிகளை பார்வையிட வைத்து மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார். நாகையில் நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு அரசு பள்ளி குழந்தைகளை சொந்த செலவில் அழைத்து வந்து புத்தகங்கள் வாங்கி கொடுத்த இளைஞரின் செயல் அனைத்து தரப்பிலும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.