மதுரை அலங்காநல்லூர் அருகே, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நீதிமன்ற உத்தரவை மீறியும், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற அவலம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் குமாரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது.
அலங்காநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட கோட்டைமேடு கல்லணை மணியஞ்சி தண்டலை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குமாரம் மெயின் ரோட்டில் இந்த முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் பொதுமக்களின் மனுக்களை வாங்கும் அதிகாரிகள் தங்களின் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுமக்களின் மனுக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் மொபைல் போனில் வீடியோ கேம்ஸ் விளையாடியும் உறவினர்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டும் தங்களது சொந்த பணிகளுக்கு வந்தவர்களைப் போல் அமர்ந்து இருந்ததுபொதுமக்களிடையே பல வகையில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

முக்கியமாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையோ, முதல்வரின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் முகாமின் அனைத்து பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படமும், பெயரும் இடம் பெற்றிருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவும், அரசு அதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் இருப்பது போல் இருந்தது அதைவிட கொடுமை.
முகாமில் பல்வேறு இடங்களில் மனுக்களை வழங்க பொதுமக்கள் வராத நிலையில் அதிகாரிகள் தங்களது செல்போன்களில் மூழ்கி இருந்தது வந்திருந்த ஒரு சில பொதுமக்களிடையே கடும் கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியது. இதுபோன்ற முகாம்களை நடத்துவதற்கு பதில் ஏற்கனவே இருப்பது போல் சம்பந்தப்பட்ட அலுவலகத்திலேயே மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தால் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் ஆட்டோக்களிலும் நடைபயணமாகவும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வருகை தரும் பொதுமக்கள் சிரமங்கள் குறையும் என்று அங்கிருந்த பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.

மேலும் 45 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் மனுக்களை பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் ஏனோதானோ என்று பெற்றுக் கொள்கிறார்கள். இந்த மனுக்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவார்களா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் இருப்பதாக கூறுகிறார்கள்.
ஆகையால் இதுபோன்ற முகாம்களை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள் முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உரிய அதிகாரிகளை நியமித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதற்கு தீர்வு ஏற்பட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், போதிய அளவில் பொதுமக்களுக்கு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து விளம்பரங்கள் செய்து அதிகளவு பொதுமக்கள் வருகை தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறிச் சென்றனர்.
