கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக மாதத்தில நிறைபுத்தரி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

இந்தநிலையில், இந்த ஆண்டு நிறைபுத்தரி பூஜை நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, சபரிமலைக்கான நிறைபுத்தரி கோஷயாத்திரை அச்சன்கோவிலில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில்,அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி கமிட்டி தமிழக பொறுப்பாளர் AGS ஹரிஹரன் குருசாமி மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் மேற்பார்வையில் நிறைபுத்தரி நெற்கதிர் கட்டுக்களை அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப்பெட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டது.
இந்த வாகனம் சபரிமலைக்கு செல்லும் வழியில் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் உள்ள பண்பொழி திருமலைக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட நெற்களஞ்சியம் வளாகத்துக்கு நேற்று காலை வந்தது. அப்போது நிறைபுத்தரி நெற்கதிர்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்துக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழக ஐயப்ப பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து காலையில் நடந்த சிற்றுண்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து அந்த வாகனம் கோட்டைவாசல் கருப்பசுவாமி கோயில், ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில், புனலூர் கிருஷ்ணர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அந்தந்த கோவிலுக்கான நிறைபுத்தரி நெற்கதிர்களை ஒப்படைத்து விட்டு பம்பை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.