நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், வெளிநாடுகளுக்கு கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனர்.
குழந்தைகள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு எவ்வளவோ முயற்சிக்கின்ற போதும், குழந்தைகள் கடத்தலை தற்போது வரை நிறுத்த முடியவில்லை. ஒரு குழந்தை காணாமல் போனால் குழந்தையை பெற்றவர்களுக்கு ஏற்படும் உணர்வை, தவிப்பை விவரிக்கவே முடியாது. வாழ்க்கையே பித்து பிடித்தது போன்று, நடமாடும் பிணமாகவே மாறி விடுவார்கள் பெற்றோர்.

கடத்தப்பட்டு யாரோ ஒருவருக்கு விற்கப்படும் குழந்தைகள் வளர்ந்து பெரிவர்களாகும் போது, தமது பெற்றோர் யார் என்ற கேள்வியும், அவர்களை ஒரு முறையாவது சந்தித்து விடமாட்டோமோ என்ற வேட்கையும் எழாமல் இருக்காது. அப்படி, தனது வாழ்க்கையில் ஒரு முறை யாவது தன்னை பெற்றவர்களை சந்தித்து விட மாட்டோமோ என்ற ஏக்கத்தில், சென்னையில் பல நாட்களாக தங்கி தேடி வருகிறார் பெல்ஜியத்தில் வசிக்கும் மதுரை இளம் பெண் அருணா.
.
கடந்த 1994 காலகட்டங்களில் , சென்னை அண்ணா நகரில் இயங்கிய மலேசியன் சோசியல் சர்வீஸ் சென்ற காப்பகம் நூற்றுக்கணக்கான குழந்தைகளை பணத்திற்கு பெற்று வெளிநாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு விற்பனை செய்த விவகாரம் அப்போது தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். பின்நாளில் அந்த காப்பகம் மூடப்பட்டது. இந்த காப்பகம் மூலமாக பெல்ஜியத்தை சேர்ந்த பிலிப் – மேரி தம்பதிக்கு இரண்டு வயதில், 1994 ல் விற்கப்பட்டவர் தான் இளம் பெண் அருணா. தற்போது 33 வயதாகும் அருணா, பெல்ஜியத்தில் பட்டப் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
ஆவணங்கள் அடிப்படையில் தனது தாயார் பெயர் சகுந்தலா என்பதும், மதுரை பாளையம், கோனார் தெரு என்பதும் மட்டுமே அருணாவிற்கு தெரிகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் அஞ்சலி பவார் உதவியோடு இந்தியாவிற்கு வந்து சென்னையிலும், மதுரையிலும் தேடி இருக்கிறார். தற்போது மீண்டும் தமிழகம் வந்துள்ள அருணா, தன் பெற்றோரை தேடி பல இடங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்.
இளம் பெண் அருணா கூறும்போது,

தனக்கு விவரம் தெரியும்போதே, தனது வளர்ப்பு பெற்றோர் உண்மையை தெரிவித்தனர் என்றும், ஏனென்றால் தோளின் நிறமே காட்டி கொடுத்து விடுகிறது என்றும் , கறுப்பான தனது நிறம் தமிழகத்து நிறம் என்றும் கண்கலங்கிய அருணா , தனது வாழ்நாளில் ஒரு முறையாவது தன்னை ஈன்றெடுத்த பெற்றோரை சந்தித்து விட வேண்டும் என தனது பயாலஜிக்கல் பெற்றோரை தேடி வருகிறார்.
அஞ்சலி பவார் வழக்கறிஞர் கூறும்போது,
அருணாவின் பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞரும், தத்தெடுப்பு உரிமைகள் கவுன்சில் இயக்குனருமான அஞ்சலி பவார், இதுவரை 83 வழக்குகளில் காணாமல் போனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், அருணாவையும் அவர்கள் பெற்றோரிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வருவதாகவும் தெரிவிக்கிறார். அருணாவை அடையாளம் தெரிபவர்கள், தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.